
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் 72ஆவது பிறந்த தினம் நாளை வியாழக்கிழமை யாழ். வடமராட்சி, வல்வெட்டித்துறையில் சிறப்பான முறையில் கொண்டாடப்படவுள்ளது என்று ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
உலகெங்கும் கொண்டாட்ட நிகழ்வுகள் இடம்பெற்றாலும், பிரபாகரன் சிறுவயதில் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள வல்வெட்டித்துறை, ஆலடி வீதியிலுள்ள காணியில், வருடந்தோறும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் தலைமையில் பிரதான நிகழ்வு இடம்பெறுவது வழமையாகும்.
இம்முறை பிரபாகரனின் 72ஆவது பிறந்த தினத்துக்கு முன்னதாகவே, சிவாஜிலிங்கம் சுகவீனம் காரணமாக அண்மையில் காலமாகிவிட்டார். இருப்பினும், அவரது வழியொற்றி அதே இடத்தில் பிறந்த தின நிகழ்வுகளை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நாளை காலை 10.00 மணிக்கு வழமை போன்று பிறந்த தின நிகழ்வுகள் ஆரம்பமாகவுள்ளன. இதன்போது பிறந்த தின கேக் வெட்டப்பட்டு, பொதுமக்களுக்குச் சிற்றுண்டிகள் மற்றும் பயன்தரு மரக்கன்றுகள் வழங்கப்படவுள்ளன. அத்துடன், மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்படவுள்ளன.
இந்த நிகழ்வில் வல்வெட்டித்துறை மக்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு ஏற்பாட்டுக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
No comments: