பிரதம பொலிஸ் பரிசோதகருக்கு விளக்கமறியல்
வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்காகப் பணம் முதலீடு செய்யப்பட்டமை தொடர்பில் எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில், பணம் தூயதாக்கல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கொட்டாவில பொலிஸ் நிலையத்தின் நிர்வாகப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதான பொலிஸ் பரிசோதகர் வருணி கேஷலா போகவத்த உள்ளிட்ட நான்கு சந்தேகநபர்களையும் எதிர்வரும் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை பிரதான நீதவான் சதுர திஸாநாயக்க நேற்று மாலை உத்தரவிட்டுள்ளார்.
பொலிஸ் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நால்வரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டத்தை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாத்தறை கூட்டுறவுச் சங்கத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் 500 கோடி ரூபா நிதி மோசடி தொடர்பில், அதன் முன்னாள் தலைவர் சமிந்த குணசேகர ஏற்கனவே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மேற்படி மோசடி தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின்போதே ஏனைய சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
விளக்கமறியலில் வைக்கப்பட்ட ஏனைய மூவரில் மாத்தறை கூட்டுறவு வைத்தியசாலையின் ஆண் மற்றும் பெண் ஊழியர்கள் இருவரும், பேரலபனாதர பல்நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் முன்னாள் பணிப்பாளர் ஒருவரும் அடங்குகின்றனர்.
மேற்படி மூன்று சந்தேகநபர்களிடமிருந்த இரண்டு கார்கள் மற்றும் இரண்டு லொறிகள், அத்துடன் பிரதான பொலிஸ் பரிசோதகர் வருணி போகவத்தவுக்குச் சொந்தமான கார் ஒன்றும் கடந்த ஒக்டோபர் 16ஆம் திகதி பொலிஸ் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினரால் பணம் தூயதாக்கல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைப்பற்றப்பட்டிருந்தன.
11/04/2026 06:58:00 AM
பிரதம பொலிஸ் பரிசோதகருக்கு விளக்கமறியல்
Subscribe to:
Post Comments (Atom)

No comments: