News Just In

11/04/2026 06:47:00 AM

சமூக வலைத்தளங்களில் போலிச் செய்திகள், காணொளிகளைப் பரப்புவோருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை!

சமூக வலைத்தளங்களில் போலிச் செய்திகள், காணொளிகளைப் பரப்புவோருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை!




நிந்தவூர் பிரதேச சபையின் நிர்வாகச் செயற்பாடுகள் மற்றும் பொதுமக்களுக்கான சேவைகளைப் பாதிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்கள், வதந்திகள் மற்றும் காணொளிகளைப் பரப்புவோருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நிந்தவூர் பிரதேச சபை எச்சரித்துள்ளது.


இது தொடர்பாக சபையின் தவிசாளர் வெளியிட்டுள்ள பொது அறிவித்தலில், உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பகிர்தல், தவறான கருத்துகளை வெளியிடுதல் மற்றும் நேரலைக் காணொளிகள் மூலம் பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துதல் போன்ற செயற்பாடுகள் கண்டிக்கத்தக்கவை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சபையின் நற்பெயருக்கும் நிர்வாகச் செயற்பாடுகளுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் பொய்யான அல்லது அவதூறான தகவல்களைப் பரப்புவோர் தொடர்பில் உரிய ஆதாரங்களின் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, சபையின் சேவைகளில் காணப்படும் குறைபாடுகள், பொதுமக்களின் முறைப்பாடுகள் மற்றும் ஆலோசனைகளை உத்தியோகபூர்வ வழிகளில் முன்வைக்குமாறு கோரப்பட்டுள்ளது. இதற்காக 067 225 0035 என்ற தொலைபேசி இலக்கம், psnintavur@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மற்றும் சபையின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கம் ஆகியவற்றைப் பயன்படுத்த முடியும்.

பொதுமக்களின் நியாயமான விமர்சனங்களுக்கும் கருத்துகளுக்கும் சபை மதிப்பளிப்பதாகவும், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலைப் பேண அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் தவிசாளர் கேட்டுக்கொண்டுள்ளார்

No comments: