உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தில் எம்ஜிஆர் உடன் இணைந்து நடத்த தாய்லாந்தைச் சேர்ந்த நாயகி மேட்டா ரூங்ராத் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
1973 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியாகி இன்றளவும் மக்களிடையே பிரபலமான திரைப்படம் “உலகம் சுற்றும் வாலிபன்”. இப்படத்தில், எம்ஜிஆர் உடன் இணைந்து மஞ்சுளா, லதா, சந்திரகலா மற்றும் மேட்டா ரூங்ராத் ஆகியோர் நாயகிகளாக நடித்திருந்தனர்.
இந்தப் படத்தில் இடம்பெற்ற “பச்சைக்கிளி முத்துச்சரம்” பாடலில் எம்.ஜி.ஆர் உடன் இணைந்து நடனமாடியதன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே அக்காலத்தில் மிகவும் பிரபலமாக அறியப்பட்டவர் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த நடிகை மேட்டா ரூங்ராத்.
தாய்லாந்தின் மின்புரி நகரத்தில் வசித்து வந்த 83 வயதான பழம்பெரும் நடிகை மேட்டா ரூங்ராத், கடந்த செவ்வாய்க்கிழமை (நவ. 3) தனது வீட்டின் படுக்கையறையில் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, தகவலறிந்து அங்கு விரைந்த தாய்லாந்து அதிகாரிகள் மேட்டாவின் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நடிகை மேட்டா ரூங்ராத் அல்செய்மர்ஸ் எனப்படும் மறதி நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அவர் தற்கொலை செய்துகொண்ட அறைக்குள் வெளி நபர் யாரும் வந்து சென்றதற்கான எந்தவொரு அடையாளமும் இல்லை எனவும் தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, தாய்லாந்து நாட்டின் முன்னணி நடிகையாக வலம்வந்த மேட்டா ரூங்ராத் தற்கொலை செய்துகொண்டது அவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
No comments: