மட்டக்களப்பு - மாமாங்கம் குடியிருப்புப் பகுதிக்குள் ஊடுருவிய குரங்குகளின் தாக்குதலுக்கு இலக்காகி இதுவரை 5 பேர் படுகாயமடைந்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் பகல் வேளைகளில்கூட வீடுகளைப் பூட்டி வைத்துக்கொண்டு பெரும் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாகக் கடும் விசனம் தெரிவிக்கின்றனர்.கடந்த சில வாரங்களாகக் குறித்த பிரதேசத்திற்குள் ஊடுருவியுள்ள குரங்குகள், மா, பலா, கொய்யா, மாதுளை போன்ற பயன்தரு மரங்களின் பழங்களை நாசப்படுத்துவதுடன், வீடுகளின் கூரை ஓடுகள் மற்றும் தகரங்களையும் (சீட்) உடைத்து அட்டகாசம் புரிந்து வருகின்றன.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை வரையிலான ஒரு வார காலப்பகுதிக்குள் அப்பகுதியைச் சேர்ந்த 5 பேர் குரங்குக் கடிக்கு இலக்காகிப் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.தொடர்ந்தும் குரங்குகள் மக்களை அச்சுறுத்தி வருவதால், பகல் நேரங்களில்கூட வீடுகளைப் பூட்டி வைத்துக்கொண்டு பாதுகாப்பற்ற சூழலில் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்குப் பலமுறை கொண்டு சென்றபோதும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.எனவே, வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவ்விடயத்தில் உடனடியாகத் தலையிட்டு, குரங்குகளின் அச்சுறுத்தலிலிருந்து தம்மைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

No comments: