News Just In

11/02/2026 11:02:00 AM

பாலமுனை ட்ரை ஸ்டார் விளையாட்டுக்கழகத்தின் 47ஆவது ஆண்டு நிறைவு: கிரிக்கெட் இறுதிப் போட்டியில் சம்பியனானது அட்டாளைச்சேனை பைனா விளையாட்டுக்கழகம்

பாலமுனை ட்ரை ஸ்டார் விளையாட்டுக்கழகத்தின் 47ஆவது ஆண்டு நிறைவு: கிரிக்கெட் இறுதிப் போட்டியில் சம்பியனானது அட்டாளைச்சேனை பைனா விளையாட்டுக்கழகம்



நூருல் ஹுதா உமர்

பாலமுனை ட்ரை ஸ்டார் விளையாட்டுக்கழகத்தின் 47 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் அட்டாளைச்சேனை பைனா விளையாட்டுக்கழகம் சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்தது.

அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த 32 விளையாட்டுக்கழகங்கள் பங்குபற்றிய இச்சுற்றுப்போட்டி, அணிக்கு 9 வீரர்கள் வீதம் 6 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்தப்பட்டது. இதன் இறுதிப்போட்டியில் பாலமுனை ட்ரை ஸ்டார் விளையாட்டுக்கழகமும் அட்டாளைச்சேனை பைனா விளையாட்டுக்கழகமும் பலப்பரீட்சை நடத்தின.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பாலமுனை ட்ரை ஸ்டார் அணி முதலில் களத்தடுப்பைத் தெரிவு செய்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய அட்டாளைசேனை பைனா அணி, நிர்ணயிக்கப்பட்ட 6 ஓவர்கள் நிறைவில் 60 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாலமுனை ட்ரை ஸ்டார் அணி ஆரம்பம் முதலே தடுமாற்றத்தை எதிர்கொண்டதால், இலக்கை எட்ட முடியாமல் 22 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. இதன்மூலம் அட்டாளைச்சேனை பைனா விளையாட்டுக்கழகம் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தைத் தனதாக்கிக் கொண்டது.

இச்சுற்றுப்போட்டியின் நிறைவு நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் பாலமுனை ட்ரை ஸ்டார் விளையாட்டுக்கழகத் தலைவர் ரீ. உவைஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் சட்டத்தரணியுமான எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார். அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ. அன்ஸில், அட்டாளைசேனை பிரதேச செயலக கணக்காளர், கல்விமான்கள், விளையாட்டுக்கழக நிர்வாகிகள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது சம்பியன் அணிக்கான வெற்றிக்கிண்ணம், இரண்டாம் இடத்தைப் பெற்ற அணிக்கான கிண்ணம், பணப்பரிசில்கள் என்பவற்றுடன் தொடர் ஆட்ட நாயகன், இறுதிப்போட்டி ஆட்ட நாயகன், சிறந்த துடுப்பாட்ட வீரர் மற்றும் சிறந்த பந்துவீச்சாளர் ஆகியோருக்கான விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

பாலமுனை ட்ரை ஸ்டார் விளையாட்டுக்கழகத்தின் 47ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்தப்பட்ட இச்சுற்றுப்போட்டி, அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த இளைஞர் விளையாட்டு அணிகளுக்கு இடையிலான விளையாட்டுத் திறன், ஒற்றுமை மற்றும் நல்லுறவை வளர்க்கும் நிகழ்வாக அமைந்தது.

No comments: