News Just In

11/05/2026 10:35:00 AM

தென்கிழக்குப் பல்கலைக்கழக முகாமைத்துவ மற்றும் வர்த்தகப் பீடத்தின் 300ஆவது பீடச் சபைக் கூட்டம்!

தென்கிழக்குப் பல்கலைக்கழக முகாமைத்துவ மற்றும் வர்த்தகப் பீடத்தின் 300ஆவது பீடச் சபைக் கூட்டம்: இரு டிஜிட்டல் திட்டங்கள் அங்குரார்ப்பணம்!


நூருல் ஹுதா உமர்

தென்கிழக்குப் பல்கலைக்கழக முகாமைத்துவ மற்றும் வர்த்தகப் பீடத்தின் 300ஆவது பீடச் சபைக் கூட்டத்தை முன்னிட்டு, டிஜிட்டல் மாற்றத்தை இலக்காகக் கொண்ட இரு புதிய திட்டங்களின் அங்குரார்ப்பண நிகழ்வு பீட வளாகத்தில் நடைபெற்றது.

“A Legacy of Decisions. A Journey of Excellence. A Future of Possibilities” (தீர்மானங்களின் மரபு, சிறப்பை நோக்கிய பயணம், சாத்தியங்கள் நிறைந்த எதிர்காலம்) என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, பீடாதிபதி பேராசிரியர் ஏ.எம்.எம். முஸ்தபா தலைமை தாங்கினார்.

நிகழ்வில் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எஸ்.எம். ஜுனைடீன், பதிவாளர் எம்.ஐ. நௌபர், பீடச் சபை உறுப்பினர்கள், திணைக்களத் தலைவர்கள், கல்விசார் மற்றும் கல்விசாரா உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

நிகழ்வின் ஆரம்பத்தில் பீட வளாகம், திணைக்களங்கள் மற்றும் விரிவுரை மண்டபங்களைத் தூய்மைப்படுத்தும் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டதுடன், வரவேற்புரை மற்றும் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. கே.எல்.எப். நுப்லாவின் கவிதை நிகழ்வும், பேராசிரியர் எஸ். குணபாலனின் பாடலும் நிகழ்வுக்கு மேலும் சிறப்புச் சேர்த்தன.

இதன்போது, பீடாதிபதி பேராசிரியர் ஏ.எம்.எம். முஸ்தபா, பீடத்தின் வரலாற்றுப் பயணம், கல்விசார் முன்னேற்றம், நிர்வாக அடைவுகள் மற்றும் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் விளக்கமளித்தார். நவீன கல்விச் சூழலுக்கு ஏற்ப பீடத்தின் செயற்பாடுகளை மேலும் மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

நிகழ்வின் முக்கிய அம்சமாக, Digital Transformation System மற்றும் Online Journal Access ஆகிய இரு புதிய திட்டங்களும் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டன. இத்திட்டங்கள் மூலம் கல்வி மற்றும் நிர்வாகச் செயற்பாடுகளை டிஜிட்டல் மயப்படுத்துவதுடன், ஆய்வாளர்கள் சர்வதேச ஆய்வுச் சஞ்சிகைகளை இணையவழியில் அணுகுவதற்கும் வாய்ப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து, உபவேந்தர் பேராசிரியர் எஸ்.எம். ஜுனைடீனுக்கும் பீடச் சபை உறுப்பினர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது பீடத்தின் சாதனைகள், தற்போதைய சவால்கள், கல்விசார் தர மேம்பாடு மற்றும் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
அத்துடன், 300ஆவது பீடச் சபைக் கூட்டத்தை நினைவுகூரும் வகையில் கேக் வெட்டும் நிகழ்வும் நினைவுச்சின்னங்கள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றன.

இதனைத் தொடர்ந்து பீடத்தின் 300ஆவது பீடச் சபைக் கூட்டம் நடைபெற்றது. பீடத்தின் கல்வி மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பான முக்கிய விடயங்கள் இதன்போது ஆராயப்பட்டன.

முகாமைத்துவ மற்றும் வர்த்தகப் பீடத்தின் நீண்டகால வளர்ச்சிப் பயணத்தையும், கல்விசார் சிறப்பு மற்றும் நவீன தொழில்நுட்பத்தை நோக்கிய அதன் எதிர்கால அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தும் முக்கிய மைல்கல்லாக இந்நிகழ்வு அமைந்தமை குறிப்பிடத்தக்கது

No comments: