News Just In

11/12/2026 08:12:00 PM

2027இல் இலங்கையில் வரவுள்ள மாற்றங்கள் என்னென்ன? ஜனாதிபதியின் அறிவிப்புகள்

2027இல் இலங்கையில் வரவுள்ள மாற்றங்கள் என்னென்ன? ஜனாதிபதியின்  அறிவிப்புகள்




கடந்த இரண்டு ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரத்தை நிலைப்படுத்த முடிந்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை இன்று (12) பாராளுமன்றத்தில் நிகழ்த்தியபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

வறுமையை ஒழித்தல், நீதியான சமூகத்தைக் கட்டியெழுப்புதல், மோசடி மற்றும் ஊழலை இல்லாதொழித்தல், பொருளாதார அபிவிருத்தியைத் துரிதப்படுத்துதல் மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையை மீளக் கட்டியெழுப்புதல் ஆகியன இந்த வரவு செலவுத் திட்டத்தின் பிரதான நோக்கங்களாகும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்குப் போர் எமது வலுசக்திச் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியதுடன், அதற்காக நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்க 147 பில்லியன் ரூபாய் செலவிடப்பட்டது.

பொருளாதார முகாமைத்துவத்தை மேற்கொள்வதுடன், கடந்த காலத்தைப் போன்று எதிர்காலச் சந்ததியினருக்கு இனிமேல் ஒரு பொருளாதார நெருக்கடி ஏற்படாதவாறு செயற்படுவதே எமது இலக்காகும்.

2025 ஆம் ஆண்டில் நடைமுறைக் கணக்கு (Current Account) வரலாற்றில் மிக உயர்ந்த அளவாக 1,719 மில்லியன் டொலர் மிகையைப் பதிவு செய்துள்ளது.

இந்த ஆண்டில் 9 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான வெளிநாட்டுப் பணவனுப்பல்கள் (Remittances) எதிர்பார்க்கப்படுகின்றன.

2022 ஆம் ஆண்டின் இறுதியில் காணப்பட்ட கடன் அளவை 2025 ஆம் ஆண்டின் இறுதியாகும் போது 95% வரை குறைத்துக்கொள்ள முடிந்துள்ளது.

2022 ஆம் ஆண்டில் அரச வருமானத்தில் 79.1% வட்டி செலுத்துவதற்காகச் செலவிடப்பட்டது. 2025 ஆம் ஆண்டாகும் போது அதனை 45.9% வரையும், 2026 செப்டெம்பர் மாதமாகும் போது 39.6% வரையும் மேலும் குறைத்துக்கொள்ள முடிந்துள்ளது.

2022 ஆம் ஆண்டில் 52 அரச தொழில்முயற்சிகளுக்காகப் பதிவாகியிருந்த 744.6 பில்லியன் ரூபாய் மொத்த வரிக்கு முந்திய தேறிய நட்டமானது, 2025 ஆம் ஆண்டில் 44.4 பில்லியன் ரூபாய் இலாபமாக மாற்றப்பட்டு, திறைசேரிக்கு இருந்த அழுத்தம் குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன், 2026 ஆகஸ்ட் மாத இறுதியில் அரச நிறுவனங்கள் 367 பில்லியன் ரூபாய் வரிக்கு முந்திய இலாபத்தைப் பதிவு செய்துள்ளன.

2018 ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மீண்டும் அரசினால் பொறுப்பேற்கப்பட்ட நாளிலிருந்து 2025 ஆம் ஆண்டு வரையிலான அதன் மொத்த திரண்ட நட்டம் 528 பில்லியன் ரூபாவாகும். இது திறைசேரிக்குப் பாரிய சுமையாக மாறியுள்ள நிலையில், இதற்குத் தீர்வு காண்பதற்காக அமைச்சரவைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

ஃபிட்ச் தரப்படுத்தல் (Fitch Ratings) நிறுவனத்தினால் இலங்கையின் இறையாண்மை கடன் தரப்படுத்தல் உயர்த்தப்பட்டுள்ளது. ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் நிறுவனத்தின் ஊழல் தொடர்பான தரப்படுத்தல்களில் இலங்கை முன்னேற்றம் அடைந்துள்ளது.

ஏற்றுமதி போட்டித்தன்மை மற்றும் அந்நிய செலாவணி கையிருப்பு பலப்படுத்தப்படும்.

2027 ஆம் ஆண்டில் அரச முதலீடு மொத்த தேசிய உற்பத்தியில் 14 சதவீதமாக இலக்கு வைக்கப்பட்டுள்ளது.

அடுத்த வருடத்தில் மூலதன செலவுகளுக்காக ரூ. 2000 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

நுண்நிதி முகாமைத்துவ அதிகாரசபையொன்று 2027 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்படும்.

அரச - தனியார் பங்காண்மை சட்டமூலம் அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் கொண்டுவரப்படும்.

முதலீட்டுப் பாதுகாப்புச் சட்டமூலம் சட்டமா அதிபரின் அனுமதிக்காக (நெறிமுறை ஒப்புதலுக்காக) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

தேசிய புள்ளிவிபரவியல் சட்டம் தற்போது வரையப்பட்டு வருகின்றது.

2027 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் சுங்கக் கட்டளைச் சட்டம் திருத்தப்படும்.

பழைய தொழிலாளர் சட்டம் திருத்தப்பட்டு பதிய பரிந்துரைகள் முன்வைக்கப்படும்.

முதலீட்டு பிரதேசங்கள் அடையாளங் காணப்பட்டு. கொழும்புக்கு வௌியில் கொண்டு செல்ல விசேட நிவாரண பொதி. முதலீட்டு ஊக்குவிப்புக்காக புதிய விசேட நிறுவனம் ஸ்தாபிக்கப்படும்.

சூதாட்ட அதிகாரசபை சட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்கான நிபந்தனைகள் கொண்டுவரப்படும்

இலங்கை - ஐரோப்பா பொருளாதார ஒத்துழைப்புக்காக ரூ. 3430 மில்லியன் ஒதுக்கம்.

சீனாவுடன் புதிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தமொன்றில் (FTA) கையெழுத்திடுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

தேசிய ஒற்றை முதலீட்டுச் சாளரத்தை உருவாக்குவதற்கான ஆலோசனை நிறுவனமொன்றைப் பெற்றுக்கொள்வதற்காக விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளன. இதனை நிறுவுவதற்காக 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் பதிவாக நாடளாவிய திடீர் மின்தடைகளை கருத்திற் கொண்டு மின்சக்தி வலையமைப்பை பாதுகாக்க ரூ.26.5 பில்லியன் ஒதுக்கம்.

வீட்டுக்கூரையில் மின்சக்தி படலம் பொருத்தியுள்ள நுகர்வோருக்கு மின் சேமிப்புக்கான பெற்றரி கொள்வனவுக்கு நிவாரணம் வழங்க ரூ. 350 மில்லியன் ஒதுக்கீடு.

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் 30 மெகாாவொட் கொள்ளளவு கொண்ட மின்கலச் சேமிப்புத் தொகுதி நிறுவப்படவுள்ளது

சூரிய மின்கல இறக்குமதிகள் மீது விதிக்கப்பட்டுள்ள 10% துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி வரி (PAL) நீக்கப்படவுள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன், 180 அலகுகளுக்கு (Units) மேல் மின்சாரத்தைப் பயன்படுத்தும் 300,000 மின் நுகர்வோருக்கு இலவசமாகத் திறன்மிக்க மின்மானிகளை (Smart Meters) வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

கிளிநொச்சியிலிருந்து ஹபரணை வரையிலான புதிய மின்சார விநியோகக் கட்டமைப்பு அமைக்கப்படவுள்ளது.

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் கொள்ளளவை ஒரு இலட்சம் பெரல்கள் வரை அதிகரிகரிப்பதற்கு அரச - தனியார் கூட்டு முதலீடு கொண்டுவரப்படவுள்ளது.

விஜேராம மாவத்தையில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான விசேட கேந்திர நிலையம் ஸ்தாபிக்கப்படும்.

தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்காக 750,000 இணைய ப்ரோட்பேண்ட் வவுச்சர்கள் வழங்கப்படவுள்ளன.

கல்வியியற் கல்லூரிகளில் பயிலும் ஆசிரியர் பயிலுநர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு 2027 ஏப்ரல் 20,000 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.

அறநெறி பாடசாலை தொண்டர் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு 12,500 ரூபாய் வரை 5000 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.

கல்வியற் கல்லூரி மற்றும் பாடசாலை உட்கட்டமைப்பு அபிவிருத்தி 35000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

பெண்கள் தலைமைத்துவம் வகிக்கும் குடும்பங்களுக்கு சலுகை அடிப்படையிலான நிதியுதவிகளை வழங்கும் வகையில் 12.5 பில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டிலான வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

இதன் கீழ், சமுர்த்தி வங்கியின் ஊடாக 3 சதவீத வருடாந்த வட்டி வீதத்தில் அதிகபட்சமாக ஒரு மில்லியன் ரூபா வரை கடன் வழங்கப்படவுள்ளது.

குழுக் கடன் அடிப்படையில் இந்தக் கடன்கள் வழங்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கிராமப்புறப் பாலங்களின் அபிவிருத்தி மற்றும் புனரமைப்புப் பணிகளுக்காக 10,630 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

கண்டி பல்வகை போக்குவரத்து மையத்திற்குச் செல்லும் அணுகு வீதியிலும், அலவ்வ மற்றும் முத்தெட்டுகல ஆகிய பகுதிகளில் உள்ள ரயில் பாதைகளைக் குறுக்கிட்டும் மேம்பாலங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளன.

தனியார் துறையில் டிஜிட்டல் புத்தாக்க நிறுவனங்கள் மற்றும் புதிய டிஜிட்டல் தொழில் முயற்சிகளுக்கு நிதியுதவிகளை வலுப்படுத்துவதற்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்படவுள்ளது.

2027ஆம் ஆண்டில் டிஜிட்டல் மயமாக்கல் நடவடிக்கைகளுக்காக மொத்தம் 28.5 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் வீதி மற்றும் ரயில்வே உட்கட்டமைப்பை அபிவிருத்தி செய்து நவீனமயப்படுத்துவதற்காக வரலாறு காணாத வகையில் 487 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

குருநாகல் – தம்புள்ளை அதிவேக நெடுஞ்சாலையின் குருநாகல் முதல் கலேவெல வரையிலான பகுதியை நிர்மாணிப்பதற்காக 30,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

ருவன்புர அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகள் எதிர்வரும் டிசம்பர் 1ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், 2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுக்கு மேலதிகமாக, 2027 ஆம் ஆண்டிற்காக மேலும் 27,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

பணமில்லாப் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் நோக்கில் GovPay மற்றும் QR குறியீட்டு அடிப்படையிலான கொடுப்பனவு முறைமைகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் முன்வைக்கப்பட்டு வரும் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையில் மேலும் பல்வேறு துறைசார் முன்மொழிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

No comments: