News Just In

10/19/2026 01:33:00 PM

யானை மீதான துப்பாக்கிச் சூடு – மேலும் ஐவர் கைது; பின்னணியில் பாரிய கடத்தல் வலையமைப்பா?

யானை மீதான துப்பாக்கிச் சூடு – மேலும் ஐவர் கைது; பின்னணியில் பாரிய கடத்தல் வலையமைப்பா?



காவன்திஸ்ஸ யானை மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், மேலும் ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.

வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம், பாணந்துறை வலான மத்திய மோசடி தடுப்புப் பிரிவு மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், குறித்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர், காவன்திஸ்ஸ யானை மீதான துப்பாக்கிச் சூட்டுடன் நேரடியாகத் தொடர்புடையவர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக சுற்றாடல் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளும் கல்கமுவ பொலிஸாரும் இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அதேவேளை, யானை மீதான துப்பாக்கிச் சூட்டிற்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியைக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், இந்தச் சம்பவத்தின் பின்னணியில் வனவிலங்குகளை இலக்கு வைத்து செயற்படும் ஒழுங்கமைக்கப்பட்ட சட்டவிரோத கடத்தல் வலையமைப்பு ஏதேனும் உள்ளதா என்பது தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய நபர்களைக் கண்டறிவதற்கும் விசாரணைகள் தொடர்வதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments: