உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இரு புலனாய்வு அதிகாரிகளையும் எதிர்வரும் 21ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று (07) கோட்டை நீதிவான் பசன் அமரசேன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வவுணதீவு இராணுவ முகாமைச் சேர்ந்த யாசிம் பாவா ஜெகில்பாஸ் மற்றும் சரத் சமந்த ஆகிய இரு புலனாய்வு அதிகாரிகளே இவ்வாறு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சிறைச்சாலையில் இருந்து நிகழ்நிலை காணொளி தொழில்நுட்பம் ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வழக்கு தொடர்பான மேலதிக அறிக்கையையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.
2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் கிடைக்கப்பெற்ற முக்கியமான தகவல்கள் மற்றும் அவற்றை மேலதிகாரிகளுக்கு அறிவிக்கும் நடைமுறை தொடர்பில் சந்தேகநபர்கள் வழங்கிய வாக்குமூலங்கள் மற்றும் சாட்சியங்கள் தொடர்ந்து பகுப்பாய்வு செய்யப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
No comments: