News Just In

10/07/2026 06:49:00 PM

எரிபொருள் போதியளவு கையிருப்பில்; வதந்திகளை நம்ப வேண்டாம்

எரிபொருள் போதியளவு கையிருப்பில்; வதந்திகளை நம்ப வேண்டாம்




அடுத்த மூன்று மாதங்களுக்கு தேவையான எரிபொருள் கையிருப்பில் இருப்பதால், எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என தேவையற்ற அச்சம் கொண்டு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நிற்க வேண்டாம் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உலக சந்தையில் எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படாத பட்சத்தில், தற்போது நிலவும் விலையிலேயே தொடர்ந்து எரிபொருளை வழங்க முடியும் என்பதால், பொதுமக்கள் தேவையின்றி பதற்றமடைய வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைமையகத்தில் நேற்று (06) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், அடுத்த மூன்று மாதங்களில் உலகளாவிய எரிபொருள் சந்தையில் பாரிய பிரச்சினை ஏற்படாத பட்சத்தில், தற்போதுள்ள எரிபொருள் விலை மற்றும் விநியோக நிலைமையை தொடர்ந்து பேண முடியும் எனக் குறிப்பிட்டார். வேறு எரிபொருள் நிறுவனங்கள் எரிபொருள் விநியோகத்தை குறைப்பதன் காரணமாக சில பகுதிகளில் தற்காலிக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் எனத் தெரிவித்த அவர், அவ்வாறான நிலை ஏற்படக்கூடிய சுமார் 62 பகுதிகள் மூன்று வாரங்களுக்கு முன்னரே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

அத்தகைய பகுதிகளுக்கு அதிகளவு எரிபொருளை விநியோகிப்பது தொடர்பில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் ஏற்கனவே இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வேறு நிறுவனங்களுக்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு அல்லது நீண்ட வரிசைகள் காணப்பட்டால், அருகிலுள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்குச் செல்லுமாறும் அவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

மேலும், மேலும் இரண்டு எரிபொருள் கப்பல்களை அவசரமாக நாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இம்மாதத்திற்குத் தேவையான அளவுக்கு மேலதிகமாகவும் எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சமூக ஊடகங்கள் ஊடாக பரப்பப்படும் தவறான மற்றும் வழிதவறச் செய்யும் தகவல்களால் பொதுமக்கள் அச்சமடைந்து எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகளில் கூட வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்

No comments: