News Just In

10/04/2026 09:04:00 AM

பௌத்த மதத்தைத் தழுவிய பழ.நெடுமாறனின் மகன் அவுஸ்திரேலியாவில் காலமானார் !

பௌத்த மதத்தைத் தழுவிய பழ.நெடுமாறனின் மகன் அவுஸ்திரேலியாவில் காலமானார் !



உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறனின் மகன் மாணிக்கம் நெடுமாறன் (57) அவுஸ்திரேலியாவில் காலமானார்.

இளம் வயதிலேயே உலக வாழ்க்கையைத் துறந்து பௌத்த மதத்தைத் தழுவிய மாணிக்கம் நெடுமாறன், அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் பௌத்த துறவியாக வாழ்ந்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில காலமாக கடுமையான புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், மெல்பேர்ணில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி நேற்று வெள்ளிக்கிழமை காலை இலங்கை நேரப்படி 8.45 மணியளவில் அவர் உயிரிழந்ததாக உலகத் தமிழர் பேரமைப்பு தெரிவித்துள்ளது.

மாணிக்கம் நெடுமாறனின் இறுதிச்சடங்குகள் பௌத்த மத வழக்கப்படி மெல்பேர்ணிலேயே நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகனின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக பழ.நெடுமாறனும் அவரது மனைவியும் அவுஸ்திரேலியா செல்ல தீர்மானித்திருந்ததாகவும், எனினும் பழ.நெடுமாறனின் கடவுச்சீட்டு முடக்கப்பட்டுள்ளதால் இருவராலும் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் உலகத் தமிழர் பேரமைப்பு தெரிவித்துள்ளது.

மகனின் இறுதிச்சடங்கில் கூட நேரில் பங்கேற்க முடியாத நிலை குடும்பத்தினருக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

மாணிக்கம் நெடுமாறனின் மறைவு செய்தியைத் தொடர்ந்து தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

No comments: