News Just In

10/29/2026 06:30:00 AM

நீதிமன்றத்தில் கழுத்தை அறுத்துக் கொண்ட சந்தேக நபர்களால் பரபரப்பு - நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு..!

நீதிமன்றத்தில் கழுத்தை அறுத்துக் கொண்ட சந்தேக நபர்களால் பரபரப்பு - நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு..!



திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் தங்களது கழுத்தை அறுத்துக் கொண்ட இருவர் உட்பட ஐந்து சந்தேக நபர்களையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் எம்.எஸ்.எம். சம்சுதீன் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பான வழக்கு இன்று(28.10.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மேற்கண்டவாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
48 மணி நேர தடுப்புக்காவல் விசாரணை

கைக்குண்டுகளைத் தம்வசம் வைத்திருந்ததாகச் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களும், கடந்த 48 மணித்தியாலங்களாகத் திருகோணமலை தலைமையக பொலிஸாரின் தடுப்புக் காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

விசாரணைகளின் பின்னர், குறித்த ஐந்து சந்தேக நபர்களும் இன்று நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர். இதன்போது, சந்தேக நபர்களில் ஒருவர் தனது கழுத்தை அறுத்துக் கொண்டதையடுத்து, மற்றுமொரு சந்தேக நபரும் அவரிடமிருந்த கூரான பிளேட்டைப் பெற்று தனது கழுத்தை அறுத்துக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


நீதிமன்ற உத்தரவு

சம்பவத்தில் காயமடைந்த இருவரும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பொலிஸார் தமக்கு எதிராகப் பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளதாகக் கவலையடைந்த நிலையிலேயே சந்தேக நபர்கள் இவ்வாறு நடந்துகொண்டதாகக் கூறப்படுகின்றது.

இந்த நிலையில், கழுத்தை அறுத்துக் கொண்ட இருவர் உட்பட ஐந்து சந்தேக நபர்களையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

No comments: