
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை கைது செய்ய சிவப்பு அறிவிப்புகள் பிறப்பிக்கப்பட்டாலும், அந்த அறிவிப்பின் அடிப்படையில் அவரை கைது செய்வது சாத்தியமில்லை என சிரேஸ்ட பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
2014ஆம் ஆண்டு ஊவா மாகாண சபைத் தேர்தலுக்காக சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தின் நிதியைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில், நிதி பயன்பாடு தொடர்பான வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
பசில் ராஜபக்சவின் கைது
இந்நிலையில், பசில் ராஜபக்சவை கைது செய்வது தொடர்பில் அவர் விளக்கமளிக்கையில்,
அமெரிக்க குடிமகனான பசில் ராஜபக்சவை இலங்கைக்கு கொண்டுவர வேண்டிய அவசியம் ஏற்பட்டால், ஒப்படைப்பு ஒப்பந்தங்களின்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
சந்தேகநபர்கள் மற்றும் கைதிகளை பரிமாறிக்கொள்வதற்காக 1999ஆம் ஆண்டில் அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையே ஒப்படைப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
அதன்படி, பசில் ராஜபக்சவை கைது செய்யுமாறு வெளிநாட்டு விவகாரங்கள் அமைச்சு அமெரிக்க வெளியுறவுத் துறையிடம் கோரிக்கை விடுக்க வேண்டும். பசில் ராஜபக்ச மீதான குற்றச்சாட்டுகள் அமெரிக்காவிற்கு தெரிவிக்கப்பட வேண்டும். அவர் மீதான குற்றச்சாட்டுகள் அமெரிக்க சட்டத்தின் கீழ் ஒரு குற்றமாக இருக்க வேண்டும்.
பசில் மீதான குற்றச்சாட்டுகள் அமெரிக்க சட்டத்தின் கீழ் கடுமையான குற்றங்களாக இருந்தால் மட்டுமே அமெரிக்க அதிகாரிகள் மேலதிக நடவடிக்கை எடுப்பார்கள்.
இலங்கையால் கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டுகள் அமெரிக்க கூட்டாட்சி நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும். ஒரு கூட்டாட்சி நீதிபதியின் முன் சாட்சியங்களை ஆராய்ந்த பிறகு, அவரை ஒப்படைப்பதற்கு போதுமான சான்றுகள் உள்ளதா என்பது குறித்து கவனம் செலுத்தப்படும்.
இதன்போது அவரை ஒப்படைப்பதற்கு போதுமான சான்றுகள் இருந்தால் மட்டுமே அமெரிக்க கூட்டாட்சி நீதிமன்றம் ஒப்படைப்புக்கான உத்தரவை பிறப்பிக்கும். கூட்டாட்சி நீதிமன்றம் ஒருவருக்கு எதிராக தீர்ப்பளித்துவிட்டது என்பதற்காக மட்டும், அமெரிக்கா ஒரு அமெரிக்கக் குடிமகனை நாடு கடத்தாது. இதற்கு அமெரிக்க வெளியுறவுச்செயலாளரின் ஒப்புதல் பெறப்பட வேண்டும்.
அமெரிக்க குடிமகனான பசில் ராஜபக்ச, இந்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படாமல் இலங்கைக்கு நாடு கடத்தப்பட மாட்டார். மற்றொரு நாட்டில் ஒருவரை கைது செய்து நாடு கடத்தும்போது, அவர் கூறுவதையும் கூட்டாட்சி பொலிஸ் கவனத்தில் கொள்ளும்.
அரசியல் காரணங்களுக்காக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன என்று சந்தேகநபர் கூறினால், அவர் நாடு கடத்தப்படமாட்டார். இதற்கு மாறாக, பாதுகாப்புப் பிரச்சினைகள் இருப்பதாக அவர் கூறினால், இன்டர்போல் அவர் மீது நடவடிக்கை எடுக்காது. அது மட்டுமல்லாமல், சிவப்பு அறிவிப்பை இரத்து செய்வதற்கும் அது நடவடிக்கை எடுக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
No comments: