இலங்கையின் 2026–2035 ஆம் ஆண்டுகளுக்கான 'மூன்றாம்கட்ட தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்பு' (NDC3.0) திட்டக் கட்டமைப்பின் கீழ், காலநிலை மாற்றம் தொடர்பான பல இலட்சிய இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இதன்படி, 2035 ஆம் ஆண்டிற்குள் நாட்டிலிருந்து வெளியேறும் பச்சை வீட்டு வாயு உமிழ்வை சாதாரண நிலையிலிருந்து கிட்டத்தட்ட 20 சதவீதம் வரை குறைப்பதற்கு இலங்கை திட்டமிட்டுள்ளது என்று கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்தார்.
ஆஸ்திரிவின் வியன்னா நகரில் உள்ள வியன்னா சர்வதேச மையத்தில் நடைபெற்ற (27 – 29 திகதிகளில்) 'பிரிட்ஜ் ஃபார் சிட்டீஸ்' சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
2030 ஆம் ஆண்டிற்குள் நாட்டின் மின் உற்பத்தியில் 70 சதவீதத்தைப் புதுப்பிக்கத்தக்க சக்தி மூலங்கள் மூலம் பெறவும், 2050 ஆம் ஆண்டளவில் 'கார்பன் நடுநிலை' நிலையை அடையவும் இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. எனினும், தேசிய மட்டத்திலான இத்தகைய இலட்சியங்கள் மட்டும் காலநிலை சவால்களை எதிர்கொள்ளப் போதுமானவை அல்ல.
அதனால், மூன்று முக்கிய துறைகளில் வலுவான சர்வதேசப் பங்களிப்புகள் அவசியமாகின்றன. முதலாவதாக, தூய்மையான தொழில்நுட்பங்களில் மலிவான முதலீடுகளைத் திரட்டுவதற்கான பசுமை நிதி தேவைப்படுகிறது.
இரண்டாவதாக, வளர்ந்து வரும் நாடுகள் மலிவான பசுமை மற்றும் டிஜிட்டல் தீர்வுகளை அணுகுவதை உறுதி செய்யும் தொழில்நுட்பப் பரிமாற்றம் அவசியமாகிறது. மூன்றாவதாக, புதிதாக உருவாகி வரும் பசுமைத் தொழில்களுக்கு ஏற்றவாறு நாட்டின் தொழிலாளர்களின் வேலைத் திறனை தயார்ப்படுத்தும் திறன் மேம்பாடு முக்கிய பங்கு வகிக்கின்றது.
அத்துடன், காலநிலை மாற்றம் தொடர்பான இலட்சியங்கள் அனைத்தும் சர்வதேச ஒற்றுமை, வளங்களைச் சமமாக அணுகும் உரிமை மற்றும் எந்தவொரு நாட்டையும் கைவிடாதிருத்தல் என்ற அடிப்படை கொள்கையின் அடிப்படையில் அமைய வேண்டும்.
இலங்கை தூய்மையான சூழல், பலமான பொருளாதாரம் ஆகியவற்றை உள்ளடக்கிய எதிர்காலத்திற்குத் தொடர்ந்தும் முயற்சித்து வருகிறது. எனினும், காலநிலை மாற்றச் சவாலானது வெறும் வாக்குறுதிகளைத் தாண்டி, ஒன்றிணைந்த தலைமைத்துவம், உண்மையான முதலீடுகள் மற்றும் அளவிடக்கூடிய செயல்பாடுகளைக் கோருகிறது.
வெறும் உரையாடல்களுக்கு அப்பால் செயற்பாடுகளுக்கும், நடைமுறைப் பங்களிப்புகளுக்கும் நகர வேண்டியது அவசியமாகும். இதன் மூலம் வளரும் நாடுகள் உலகப் பொருளாதாரத்தில் தொழில்மயமாக்கவும், நிலையான வளர்ச்சி பெறவும் நியாயமான வாய்ப்புகள் உறுதி செய்யப்பட வேண்டும்.
இலங்கையின் இந்த பசுமை மாற்றத்தை விரைவுபடுத்துவதற்கு தேவையான நிதி, நிபுணத்துவம் மற்றும் முதலீடுகளைத் திரட்ட ஐக்கிய நாடுகளின் தொழில்துறை அபிவிருத்தி அமைப்பு, வளர்ச்சிப் பங்காளர்கள், சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையினர் இலங்கையுடன் இணைந்து செயல்பட வேண்டும்.
ஐக்கிய நாடுகளின் தொழில்துறை அபிவிருத்தி அமைப்பு தனது அடுத்த 60 ஆண்டுகளில் அடியெடுத்து வைக்கும் இத்தருணத்தில், இலங்கையுடனான பங்களிப்பை மேலும் ஆழப்படுத்தவும், பசுமை இலட்சியங்களை நமது தேசம், பொருளாதாரம் மற்றும் எதிர்கால சந்ததியினரைப் பாதுகாக்கும் சாதனைகளாக மாற்றவும் இலங்கை முழுத் தயார் நிலையில் உள்ளது என்றார்.

No comments: