News Just In

10/28/2026 04:04:00 PM

கபூர் மாமா’வுக்கு 12 ஆண்டுகள் கடுங்காவல் சிறை

கபூர் மாமா’வுக்கு 12 ஆண்டுகள் கடுங்காவல் சிறை


வனாத்தவில்லுவ பகுதியில் வெடிபொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களைப் சேமித்து வைத்திருந்த சம்பவம் தொடர்பான வழக்கின் மூன்றாவது பிரதிவாதியான ‘கபூர் மாமா’ எனப்படும் மொஹமட் ஷரீப் ஆதம் லெப்பை என்பவருக்கு 12 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தனக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட ஐந்து குற்றப்பத்திரிகைகளையும் பிரதிவாதி ஏற்றுக்கொண்டு குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாத்தினால் இத்தீர்ப்பு புதன்கிழமை (28) அன்று வழங்கப்பட்டது.

நீதிபதிகளான லால் ரணசிங்க பண்டார, ரஷ்மி சிங்கப்புலி மற்றும் நயோமி விக்கிரமசிங்க ஆகியோரைக் கொண்ட நீதிபதிகள் குழாம், ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டதுடன், இத்தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டது.

இருப்பினும், பிரதிவாதி ஏற்கனவே விளக்கமறியலிலும் தடுப்புக் காவற்கட்டளையின் கீழும் கழித்த ஏழரை ஆண்டுகளை இத்தண்டனையிலிருந்து கழிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதன்படி, அவர் மேலும் சுமார் நான்கரை ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தண்டனையைத் தீர்மானிக்கும் போது, பிரதிவாதி குற்றத்தை ஒப்புக்கொண்டதன் மூலம் நீண்ட விசாரணை தவிர்க்கப்பட்டமை மற்றும் அவரின் 63 வயதான வயது முதிர்வு உள்ளிட்ட பல காரணிகளை நீதிபதிகள் குழாம் கவனத்தில் கொண்டது.

இதற்கிடையில், ஆறாவது பிரதிவாதியான ‘சஜித் மௌலவி’ எனப்படும் மொஹமட் ரமீஸ் மொஹமட் சஜித், தன் மீதான குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டு குற்றத்தை ஒப்புக்கொள்வதா இல்லையா என்பதைத் தீர்மானிக்க அவகாசம் கோரினார்.

அவரது தீர்மானத்தைச் செவிமடுப்பதற்காக வழக்கினை வியாழக்கிழமை (29) காலை 8.00 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டது. காலை 7.45 மணிக்கு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சிறைச்சாலைகள் அத்தியட்சகருக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டது.

கேகாலை மற்றும் மட்டக்களப்பு மேல் நீதிமன்றங்களில் கபூர் மாமாவுக்கு எதிராக நிலுவையில் உள்ள மேலும் இரு வழக்குகள் தொடர்பான விசாரணைகளுக்கு அவரை ஆஜர்படுத்தும்போது, அவருக்குச் சிறப்புப் பாதுகாப்பு வழங்குமாறு அதிகாரிகளுக்கு நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டது.

இவ்வழக்கு தொடர்பாக ஆறு பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரால் 13 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வழக்கு விசாரணைகளின் போது நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டது. பிரதிவாதிகளில் ஐவர் தற்போது குற்றத்தை ஒப்புக்கொண்டு தண்டனை பெற்றுள்ளனர்.

No comments: