News Just In

10/08/2026 01:19:00 PM

சுமார் 10 மாதங்களுக்குப் பின்னர் மட்டக்களப்பில் காலை வேளை மழை.


சுமார் 10 மாதங்களுக்குப் பின்னர் மட்டக்களப்பில் காலை வேளை மழை.



(ஏ.எச்.ஏ. ஹுஸைன் )

மட்டக்களப்பு மாவட்டத்திலும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் வியாழக்கிழமை காலை மழை பெய்யத் துவங்கியுள்ளது. இது சுமாரான மழையாகக் காணப்பட்டது. இதனால் கிழக்கு மாகாணத்தில் நீண்ட காலமாக நிலவிய அனல் வெப்பம் தணிந்தது.

இது இப்பிரதேசங்களில் சுமார் 10 மாதங்களுக்குப் பின்னர் காலை வேளையில் பெய்த மழை என அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

வடகீழ்ப் பருவப் பெயர்ச்சி மழையின் தொடக்க நிகழ்வாகவே இவ்வாறு காலை வேளையில் மழை பெய்வதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். வானம் நாள் முழுக்க மேக மூட்டத்துடன் மப்பும் மந்தாரமுமாகக் காணப்பட்டது.

நீர் நிலைகள் ஆறுகள், குளம் குட்டைகள், கிணறுகள் வற்றிப் போவதற்குக் காரணமாகவிருந்த நீண்ட வறட்சிக்குப் பின்னர் இவ்வாறு மழை பெய்ய ஆரம்பித்துள்ளது சற்று ஆறுதலளிப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பிலும் கிழக்கு மாகாணத்திலும் நீண்ட காலம் நிலவிய வறட்சியின் காரணைமாக மரம் செடி கொடிகள் கருகிவிட்டிருந்தன. விவசாயச் செய்கையும் பெருமளவில் பாதிக்கப்பட்டிருந்தது. அத்துடன் கால்நடைகளும் காட்டு விலங்குகளும் குடிநீரின்றி பெரிதும் பாதிக்கப்டிருந்தன.

கிழக்கில் தற்போது பெரும்போகச் செய்கைக்கான தயார் படுத்தல் வேலைகள் ஏற்கெனவே தொடங்கி விட்டன. விவாசயிகள் சீரான பருவ வான் மழையை எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கின்றனர்.

No comments: