சவூதி அரேபியாவில் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான எஸ். அனோஜனின் விடுதலைக்காக ஜனாதிபதி நேரடியாகத் தலையிட்டு, உச்சகட்ட இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி அன்வர் எம். முஸ்தபா கோரிக்கை விடுத்துள்ளார்.
நபிகள் நாயகம் தொடர்பில் தான் வெளியிட்ட கருத்துக்காக அனோஜன் மன்னிப்பு கோரியுள்ள நிலையில், இவ்விடயத்தை தண்டனை என்ற ஒரு கோணத்தில் மாத்திரம் அணுகாமல், இஸ்லாம் வலியுறுத்தும் மன்னிப்பு, கருணை, சமாதானம், சகோதரத்துவம் மற்றும் மனிதாபிமானம் ஆகிய அடிப்படைப் போதனைகளின் அடிப்படையில் அணுகுவது அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.
இஸ்லாம் சமாதானத்தையும் மனிதர்களுக்கிடையிலான நல்லுறவையும் வலியுறுத்தும் மார்க்கமாகும். நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் மன்னிப்பு, பொறுமை மற்றும் கருணைக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளமை இஸ்லாமிய வரலாற்றில் தெளிவாகக் காணப்படுகிறது. எனவே, ஒருவர் தனது கருத்துக்காக மன்னிப்பு கோரியுள்ள சூழ்நிலையில், அவரது மனமாற்றத்தையும் மனிதாபிமான நிலைமையையும் கருத்திற்கொண்டு கருணையுடன் அணுகுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
அனோஜனின் தாயார் தனது மகனை மீண்டும் காண வேண்டும் என்ற ஏக்கத்துடன் காத்திருக்கும் நிலையில், அவரது கண்ணீரையும் குடும்பத்தின் துயரத்தையும் கருத்திற்கொண்டு சவூதி அரேபிய அரசாங்கம் இவ்விடயத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன், ஜனாதிபதி நேரடியாகத் தலையிட்டு, வெளிவிவகார அமைச்சு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு மற்றும் சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, அனோஜனின் விடுதலைக்கான அனைத்து சட்டரீதியான மற்றும் இராஜதந்திர வாய்ப்புகளையும் பயன்படுத்த வேண்டும்.
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி வேறுபாடுகளைக் கடந்து ஒன்றிணைந்து ஜனாதிபதியை சந்தித்து, இவ்விடயத்தில் அவசர நடவடிக்கை எடுக்குமாறு கோருவதும் முக்கியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் இன, மத அல்லது அரசியல் பிரச்சினையாகப் பார்க்கப்படாமல், “அனோஜன் ஒரு இலங்கைப் பிரஜை” என்ற அடிப்படையிலும், ஒரு மனிதாபிமானப் பிரச்சினையாகவும் அணுகப்பட வேண்டும். வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அரசாங்கத்தின் பொறுப்புடனும் இது தொடர்புபட்டுள்ளது.
இலங்கையின் பல்வேறு இன, மத சமூகங்களுக்கிடையே ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப வேண்டிய காலகட்டத்தில், அனோஜன் விடயத்தை மனிதாபிமான அணுகுமுறையுடன் கையாள்வது சமூக நல்லிணக்கத்திற்கும் வலுசேர்க்கும்.
அனோஜனின் விடுதலை அவரது குடும்பத்துக்கு மட்டுமல்ல; ஒரு இலங்கைப் பிரஜை பாதுகாப்பாக நாடு திரும்புவதை எதிர்பார்த்துக் காத்திருக்கும் முழு நாட்டிற்கும் மகிழ்ச்சியைத் தரும். மன்னிப்பு, கருணை மற்றும் சமாதானத்தின் அடிப்படையில் இந்த விடயத்திற்கு ஒரு மனிதாபிமானத் தீர்வு கிடைக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும் என கலாநிதி அன்வர் எம். முஸ்தபா தெரிவித்துள்ளார்
No comments: