
பொது பல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், தாம் தங்கியிருந்த ராஜகிரிய ஸ்ரீ சதர்மராஜிக விகாரையிலிருந்து வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு சட்டவிரோதமானது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து அவர் தறைமறைவாகியுள்ளதாக தென்னிலங்கை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவியான சந்தியா எக்னலிகொட உள்ளிட்ட தரப்பினர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு மீதான விசாரணையின் பின்னர் உயர் நீதிமன்றம் மேற்படி தீர்ப்பை வழங்கியுள்ளது.
அதன்படி, நீதிமன்ற வளாகத்திற்குள் சந்தியா ஏக்னலிகொடவை அச்சுறுத்தியமை மற்றும் நீதிமன்றத்தை அவமதித்தமைக்காக 2018 ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனையின் எஞ்சிய பகுதியை அனுபவிப்பதற்காக அவர் மீண்டும் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், உயர்நீதிமன்றின் இத்தீர்ப்பு வெளியானதனைத் தொடர்ந்து அவர் விகாரையிலிருந்து வெளியேறியுள்ளதாகவும், இதுவரை காவல்துறையினரோ அல்லது பாதுகாப்புத் தரப்பினரோ அவரைக் கைது செய்யவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments: