News Just In

9/12/2026 02:11:00 PM

பாடசாலை நூலகங்களை வலுப்படுத்தும் செயற்றிட்டம் – 02 : அல்-ஹிலால் வித்தியாலயத்திற்கு பெறுமதிமிக்க நூல்கள் அன்பளிப்பு

பாடசாலை நூலகங்களை வலுப்படுத்தும் செயற்றிட்டம் – 02 : அல்-ஹிலால் வித்தியாலயத்திற்கு பெறுமதிமிக்க நூல்கள் அன்பளிப்பு


நூருல் ஹுதா உமர்

சாய்ந்தமருதைச் சேர்ந்த ஓய்வுநிலை கல்வி அதிகாரியும் சிரேஷ்ட எழுத்தாளருமான ஏ. பீர் முகம்மது அவர்களின் கைவசமிருந்த பெறுமதிமிக்க நூல் தொகுதி ஒன்று, சாய்ந்தமருது பொது நூலகத்தின் ஒருங்கிணைப்பில் சாய்ந்தமருது கமு/கமு/அல்-ஹிலால் வித்தியாலயத்திற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

“பாடசாலை நூலகங்களை வலுப்படுத்தும் செயற்றிட்டம் – 02” என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்ட இந்நூல் அன்பளிப்பு நிகழ்வு, கடந்த வியாழக்கிழமை (10.09.2026) அல்-ஹிலால் வித்தியாலய நூலகத்தில் இடம்பெற்றது.

மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கிலும், எதிர்வரும் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டும் சாய்ந்தமருது பொது நூலகத்தினால் இந்த விசேட செயற்றிட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சாய்ந்தமருது பொது நூலக நூலகர் ஏ.எல்.எம். முஸ்தாக் அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வு, அல்-ஹிலால் வித்தியாலய அதிபர் ஜனாப் கே.எல். ஜஃபர் அவர்களின் தலைமையில் பாடசாலை நூலகத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

மாணவர்களின் அறிவுத் தேடலையும் வாசிப்பு ஆர்வத்தையும் மேம்படுத்துவதில் பாடசாலை நூலகங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. அந்த வகையில், பெறுமதிமிக்க நூல்களை பாடசாலை நூலகங்களுக்கு வழங்குவதன் மூலம் மாணவர்களின் அறிவுப் பரப்பை விரிவுபடுத்தும் நோக்கில் இச்செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இச்செயற்றிட்டத்தின் முதற்கட்டமாக, கடந்த வருடம் சாய்ந்தமருது மழ்ஹருஷ் ஷம்ஸ் தேசிய பாடசாலைக்கும் எழுத்தாளர் ஏ. பீர் முகம்மது அவர்களினால் பெறுமதிமிக்க நூல் தொகுதி ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலை மாணவர்களிடையே வாசிப்புப் பண்பாட்டை மேலும் வலுப்படுத்தும் வகையில், எதிர்காலத்திலும் இத்தகைய நூல் அன்பளிப்பு நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்க எதிர்பார்க்கப்படுகின்றது

No comments: