News Just In

7/02/2026 06:18:00 AM

உஹனையில் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்ட பிரதான சந்தேகநபர் கைது : மாறுவேடத்தில் சென்ற பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை!

உஹனையில் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்ட பிரதான சந்தேகநபர் கைது : மாறுவேடத்தில் சென்ற பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையில் ஹெரோயினுடன் சிக்கினார்


நூருல் ஹுதா உமர்

உஹனைப் பகுதியில் இளைஞர்களுக்கு ஹெரோயின் போதைப்பொருளை அறிமுகப்படுத்தி, நீண்டகாலமாக போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும் பிரதான சந்தேகநபர் ஒருவர், அம்பாறை பிரிவு பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு (CCD) அதிகாரிகள் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டுள்ளார்.

உஹனை 21, திஸ்ஸபுர கிராமத்தில் அமைந்துள்ள அவரது வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, ஹெரோயின் 5 கிராம் மற்றும் 30 மில்லிகிராம் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சந்தேகநபர் சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் உஹனை பொலிஸ் நிலையத்திற்கு அண்மையில் உள்ள வீட்டொன்றிலிருந்து போதைப்பொருள் வியாபாரத்தை நடத்தி வந்ததாகவும், அப்போது அவரை கைது செய்ய பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் அது வெற்றியளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இடமாற்றம் செய்யப்பட்ட பின்னர், தற்போதைய பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் சுமித் குணவர்தன பதவியேற்றதைத் தொடர்ந்து, கிடைத்த இரகசிய தகவல்களின் அடிப்படையில் பல முறை சந்தேகநபரை கைது செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் ஒவ்வொரு முறையும் பொலிஸார் சுற்றிவளைப்புக்குச் செல்லும் முன்பே தகவல்கள் சந்தேகநபரிடம் சென்றதால், அவர் தப்பிச் சென்றதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து அம்பாறை பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் சுஜித் வேதமுல்ல அவர்களின் நேரடி தலையீட்டின் பேரில், அம்பாறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு கடந்த ஜூன் 28 ஆம் திகதி மாலை விசேட நடவடிக்கையை மேற்கொண்டு சந்தேகநபரை அவரது வீட்டிலேயே கைது செய்தது. சந்தேகநபரின் வீட்டைச் சுற்றி CCTV கமெராக்கள், அதிக ஒளிவிளக்குகள் உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாகவும், பொலிஸார் வருவதை முன்கூட்டியே அறியும் வலையமைப்பும் அவரிடம் இருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதனால் பொலிஸார் புத்திசாலித்தனமான திட்டமொன்றை வகுத்தனர்.

முதலில் மறைமுக முகவர் ஒருவர் அனுப்பப்பட்டு, அவருக்கு சந்தேகநபர் ஹெரோயின் விற்பனை செய்தமை உறுதிப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அம்பாறை பிரிவு ஊழல் ஒழிப்பு மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் டெங்கு பரிசோதனை அதிகாரிகள் என்ற மாறுவேடத்தில் சந்தேகநபரின் வீட்டிற்குச் சென்றனர். இந்தக் குழுவில் நான்கு மாத கர்ப்பிணியான பெண் பொலிஸ் அதிகாரியும் இடம்பெற்றிருந்தார்.

வீட்டில் டெங்கு பரிசோதனை மேற்கொள்வதாகக் கூறி வளாகத்தை ஆய்வு செய்தபோது, சந்தேகநபர் அதிகாரிகளிடம் பல்வேறு குறைகளை முன்வைத்து, "இப்போது தான் டெங்கு பார்க்க வருகிறீர்கள்; கொரோனா காலத்தில் யாரும் வரவில்லை" எனக் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது. சரியான தருணம் கிடைத்தவுடன், மாறுவேடத்தில் இருந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக அவரைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட பின்னர், தன்னை விடுவிக்குமாறு கோரி, குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ். ரத்நாயக்க அவர்களுக்கு ரூ.2 இலட்சம் இலஞ்சமாக வழங்க முன்வந்ததாகவும், ஆனால் அதனை அதிகாரிகள் நிராகரித்து, சந்தேகநபரை சட்டநடவடிக்கைக்காக அழைத்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் உஹனை பொலிஸ் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர், அம்பாறை மேலதிக நீதவான் புஷ்பராஜா ஆனந்த வதனி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். சந்தேகநபரை ஏழு நாட்கள் தடுத்து வைத்து விசாரணை நடத்த அனுமதி கோரி பொலிஸார் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், நீதிமன்றம் மூன்று நாட்கள் தடுத்து வைத்து விசாரணை நடத்த அனுமதி வழங்கியுள்ளது. தற்போது சந்தேகநபர் உஹனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அம்பாறை பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் சுஜித் வேதமுல்ல அவர்களின் பணிப்புரையின் பேரில், அம்பாறை பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராச்சி அவர்களின் மேற்பார்வையிலும், உதவி பொலிஸ் அத்தியட்சகர் சம்பத் விக்ரமரத்ன அவர்களின் வழிகாட்டலிலும், குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் இந்த விசேட நடவடிக்கையை வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளனர்.

No comments: