News Just In

7/27/2026 06:49:00 PM

காதலிக்கு 3,000 கோடி உயில் எழுதிவைத்துவிட்டு இறந்த கோடீஸ்வரர் ஜெஃப்ரி எப்ஸ்டீன் : யார் அந்த இளம்பெண்?

காதலிக்கு 3,000 கோடி உயில் எழுதிவைத்துவிட்டு இறந்த கோடீஸ்வரர் ஜெஃப்ரி எப்ஸ்டீன்: யார் அந்த இளம்பெண்?



ஏராளம் இளம்பெண்களை சீரழித்த மோசமான குற்றவாளியான அமெரிக்க கோடீஸ்வரர் ஜெஃப்ரி எப்ஸ்டீனை நினைவிருக்கலாம்.

அந்த நபர், தன் காதலியான ஒரு இளம்பெண்ணுக்கு 100 மில்லியன் டொலர்கள் சொத்தை உயில் எழுதிவைத்துவிட்டுச் சென்றுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

பொதுவாக, எப்ஸ்டீனுடைய காதலி என்றாலே, கிஸ்லெய்ன் மேக்ஸ்வெல் என்னும் பெண்ணின் முகம்தான் நினைவுக்கு வரும்.

ஆனால், எப்ஸ்டீன் 100 மில்லியன் டொலர்கள் சொத்து எழுதிவைத்துள்ளது அந்த மேக்ஸ்வெல்லுக்கு அல்ல!

ஆம், காருண்யா ஷுலியாக் (37) என்னும் இளம்பெண்ணுக்குதான் எப்ஸ்டீன் உயிலில் 100 மில்லியன் டொலர்கள் சொத்து எழுதிவைத்துள்ளார்.

இந்த காருண்யாவைக் குறித்து பல தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. பெலாரஸ் நாட்டவரான காருண்யா 2010ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கு வந்துள்ளார்.

அவருக்கு 21 வயது இருக்கும்போது 58 வயதான எப்ஸ்டீனை காருண்யா சந்திக்க, காருண்யாவால் ஈர்க்கப்பட்ட எப்ஸ்டீன், அவர் பல் மருத்துவம் படிப்பதற்கு கொலம்பியா பல்கலையில் இடம் வாங்கிக் கொடுத்தது முதல், அவரது குடும்பத்துக்கு பண உதவி செய்தது வரை பல்வேறு உதவிகளைச் செய்துள்ளார்.



2013இல் காருண்யாவின் விசா காலாவதியாகிவிட, உடனடியாக காருண்யாவுக்கும் தனது உதவியாளரான மற்றொரு பெண்ணுக்கும் திருமணம் செய்துவைத்துள்ளார் எப்ஸ்டீன்.

ஒரு பாலின திருமணத்தைக் காரணம் காட்டி அமெரிக்காவிலேயே தங்கி, கிரீன் கார்டு வாங்கிய காருண்யா, 2018இல் அமெரிக்கக் குடியுரிமையும் பெற்ற கையோடு, அந்தப் பெண்ணை விவாகரத்து செய்துவிட்டார்.

பின்னர் முழுமையாக எப்ஸ்டீனுடைய சொத்துக்கள், பணியாளர்கள், வீடு புதுப்பித்தல், மரச்சாமான்கள் வாங்குதல், நிர்வாகம் என அனைத்துப் பொறுப்புகளையும் ஏற்றுக்கொண்டுள்ளார் காருண்யா.

இருவரும் காதலித்ததாகவும், திருமணம் செய்துகொள்ளத் திட்டமிட்டிருந்ததாகவும் கூட கூறப்படுகிறது.

இந்நிலையில், 2019ஆம் ஆண்டு எப்ஸ்டீன் சிறை செல்ல, சரியாக ஒரு மாதம் கழித்து காருண்யாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார் எப்ஸ்டீன்.தனது வழக்கு முடிவடைய நீண்ட காலம் ஆகலாம் என்றும், ஆகவே, தங்குவதற்கு வேறு இடம் பார்த்துக்கொள்ளுமாறும் கூறிய எப்ஸ்டீன், பயப்படாதே, தைரியமாக இரு என்றும் காருண்யாவிடம் கூறியுள்ளார்.

அடுத்த நாள், அதாவது, ஆகத்து மாதம் 10ஆம் திகதி, எப்ஸ்டீன் தன் சிறை அறையில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்ததாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், எப்ஸ்டீன் காருண்யாவுக்கு 100 மில்லியன் டொலர்கள், 33 காரட் எடையுள்ள ஒரு வைர மோதிரம் முதலான பல சொத்துக்களை உயில் எழுதிவைத்துவிட்டுச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

100 மில்லியன் டொலர்கள் என்பது இலங்கை மதிப்பில் 33,54,74,60,000.00 ரூபாய் ஆகும்.

விடயம் என்னவென்றால், எப்ஸ்டீனுக்கு 600 மில்லியன் டொலர்கள் சொத்து என கணக்கிடப்பட்டுள்ள நிலையில், அவரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கியது போக, தற்போது அவருடைய சொத்து மதிப்பு 120 மில்லியன் முதல் 200 மில்லியன் டொலர்கள் மட்டுமே.

ஆக, காருண்யாவுக்கு எதிர்பார்த்தபடி 3,000 கோடி கிடைக்குமா என்பது உறுதியாகத் தெரியவில்லை!

No comments: