News Just In

6/25/2026 05:30:00 PM

இரா. சாணக்கியன் கோரிக்கைக்கு இணங்க மட்டக்களப்பிற்கும் புதிய பேருந்துகள் மற்றும் பணியாளர்கள் வழங்க நடவடிக்கை – அமைச்சர் உறுதி

இரா. சாணக்கியன் கோரிக்கைக்கு இணங்க மட்டக்களப்பிற்கும் புதிய பேருந்துகள் மற்றும் பணியாளர்கள் வழங்க நடவடிக்கை – அமைச்சர் உறுதி
அதே போன்று புகையிரத கட்டண வேறுபாடு தொடர்பில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.


இன்றைய தினம் (25.06.2026) பாராளுமன்ற கேள்வி-பதில் நேரத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பொதுப் போக்குவரத்து சேவைகள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் இராசமாணிக்கம் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர், அரசாங்கம் கொள்வனவு செய்யத் திட்டமிட்டுள்ள 600 புதிய பேருந்துகளில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் பேருந்துகள் வழங்கப்படுவதோடு, அவற்றுக்குத் தேவையான சாரதிகள் மற்றும் நடத்துநர்களையும் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

இதன்போது மேலதிகக் கேள்விகளை எழுப்பிய இரா. சாணக்கியன் இராசமாணிக்கம், மாகாணங்களுக்கிடையிலான பேருந்து போக்குவரத்து சேவையை மேலும் விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் அவசியம் என வலியுறுத்தினார்.

அதேவேளை, இலங்கை போக்குவரத்துச் சபையும் தனியார் பேருந்து சேவைகளும் இணைந்து முன்னெடுத்து வரும் ஒன்றிணைந்த போக்குவரத்து சேவை தொடரப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த முறைமை நீக்கப்பட்டால் போட்டித்தன்மை அதிகரித்து, சாலை விபத்துகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும் என்பதால், ஒன்றிணைந்த போக்குவரத்து சேவையைப் பாதுகாத்து முன்னெடுப்பதில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது நடைமுறையில் உள்ள சிசுசரிய (Sisu Seriya) சேவையை மேலும் விரிவுபடுத்த வேண்டிய அவசியம் உள்ளதாகவும், போதுமான அளவில் பேருந்துகள் இல்லாத காரணத்தால் இந்த சேவையின் வழங்கலில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், மட்டக்களப்பு, வாழைச்சேனை மற்றும் களுவாஞ்சிக்குடி ஆகிய டிப்போக்கள் நீண்டகாலமாக புனரமைப்பு செய்யப்பட வேண்டிய நிலையில் உள்ளதாக தெரிவித்த அவர், கடந்த காலங்களில் சிலர் தங்களது சொந்தப் பகுதிகளில் உள்ள டிப்போக்களின் அபிவிருத்தியில் அதிக கவனம் செலுத்தியதால் மட்டக்களப்பு மாவட்டத்தின் பொதுப் போக்குவரத்து கட்டமைப்பு பின்தங்கியுள்ளதாக கூறினார். ஆகையால் மட்டக்களப்பு, வாழைச்சேனை மற்றும் களுவாஞ்சிக்குடி ஆகிய மூன்று பிரதான டிப்போக்களையும் உடனடியாக புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்ட தூர சேவைகளில் ஈடுபடும் பல பேருந்துகளின் தரம் திருப்திகரமாக இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அரசாங்கம் புதிதாக 600 பேருந்துகளை கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ள நிலையில், அவற்றில் ஒரு பகுதியை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

அதேபோன்று, கிழக்கு மாகாணத்திலும் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்திலும் பெருமளவான இளைஞர்கள் பேருந்து சாரதி மற்றும் நடத்துநர் பணிகளுக்காக விண்ணப்பித்திருந்த போதிலும், இதுவரை பலருக்கு நியமனங்கள் வழங்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டார். இதனால் நிலவும் பணியாளர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, விண்ணப்பித்தவர்களுக்கு விரைவில் நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

புகையிரத சேவைகள் தொடர்பாக கருத்து வெளியிட்ட அவர், மட்டக்களப்பு – கொழும்பு புகையிரத சேவை மேலும் வினைத்திறனாக மாற்றப்பட வேண்டும் என்றார். தற்போது தினசரி மூன்று புகையிரதங்கள் சேவையில் ஈடுபட்டுள்ள போதிலும், கட்டணங்களில் காணப்படும் முரண்பாடுகள் பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதாக அவர் தெரிவித்தார்.

அதிகாலை சேவையில் இயங்கும் புகையிரதத்தில் மூன்றாம் வகுப்பு கட்டணம் ரூ.560 ஆக அறவிடப்படுகின்ற நிலையில், அதேபோன்ற சுமார் 09 மணித்தியால பயண நேரத்தைக் கொண்ட புலஸ்தினி மற்றும் இரவு தபால் புகையிரதங்களில் மூன்றாம் வகுப்பு கட்டணம் ரூ.1,000 ஐத் தாண்டி அறவிடப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

மூன்று புகையிரதங்களும் ஏறத்தாழ ஒரே அளவிலான பயண நேரத்தைக் கொண்டிருக்கும் நிலையில், கட்டணங்களில் இவ்வாறான பாரிய வேறுபாடு காணப்படுவது நியாயமற்றது என்றும், இந்த கட்டண முரண்பாட்டை உடனடியாக பரிசீலித்து திருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் பொதுப் போக்குவரத்து சேவைகளை மேம்படுத்துவதற்காக புதிய பேருந்துகள் வழங்குதல், சாரதிகள் மற்றும் நடத்துநர்களை நியமித்தல், சிசுசரிய சேவையை விரிவுபடுத்துதல், டிப்போக்களை புனரமைத்தல் மற்றும் புகையிரத சேவைகளை மேம்படுத்துதல் ஆகிய விடயங்கள் தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்துவதாக அமைச்சர் பதிலளித்தார்.

No comments: