கல்முனை கல்வி வலய கமு/கமு/ அல்-பஹ்ரியா மகா வித்தியாலய பழைய மாணவிகள் சங்கத்தினால் பாடசாலை அலுவலகப் பாவனைக்கான கணனித்தொகுதி அன்பளிப்பும், எம்.பீ. முகையதீன் ஞாபகார்த்த நவீன கற்கைகள் மண்டபத்திற்காக 50 கதிரைகள் எம்.பீ. முகையதீன் அவர்களின் மகன் எம்.எம். நளீம் முகையதீன் அவர்களினால் அன்பளிக்கும் நிகழ்வும், ஹஜ்ஜுப் பெருநாள் ஒன்றுகூடலும் (02) எம்.பீ. முகையதீன் ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றது.
பாடசாலை ஆசிரியர் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில், பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம். பைசால் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை கல்வி வலய பிரதிக்கல்வி பணிப்பாளர்களான எம்.எச். றியாஸா, என். வரணியா சாந்தரூபன், எம்.எல்.எம். முத்தரிஸ், அஸ்மா அப்துல் மலீக், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் (HRCSL) கல்முனை பிராந்திய இணைப்பாளர் ஏ.சி. அப்துல் அசீஸ், அல் மீஸான் பௌண்டஷன் தவிசாளர் யூ.எல்.என். ஹுதா உமர், கல்முனை பிர்லியண்ட் விளையாட்டுக்கழக பயிற்றுவிப்பாளர் யூ.எல். பழீல் உட்பட பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழுவினர், பழைய மாணவிகள் சங்க நிர்வாகிகள், பிரதி மற்றும் உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விசார் நலன்விரும்பிகள் மற்றும் அதிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் போது பாடசாலை நிர்வாகப் பணிகளை மேலும் திறம்பட முன்னெடுப்பதற்காக அலுவலகப் பயன்பாட்டிற்கான கணனித்தொகுதி பழைய மாணவிகளினால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டதுடன், மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்படும் எம்.பீ. முகையதீன் ஞாபகார்த்த நவீன கற்கைகள் மண்டபத்திற்கு 50 புதிய கதிரைகளும் எம்.பீ. முகையதீன் அவர்களின் மகன் எம்.எம். நளீம் முகையதீன் அவர்களின் பிரதிநிதியாக அவரது சகோதரர் நவாஸ் முஹைதீன் அவர்களினால் வழங்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு ஒன்றுகூடல் நிகழ்வும் இடம்பெற்றதுடன், கலந்து கொண்ட அனைவருக்கும் பெருநாள் சிறப்பு உணவுகளும் பரிமாறப்பட்டன. பாடசாலையின் கல்வி மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு தொடர்ச்சியாக பங்களிப்பு வழங்கி வரும் பழைய மாணவர்கள் சங்கம் மற்றும் பழைய மாணவிகள் சங்கத்தின் இந்தப் பணியை அதிபர் உள்ளிட்ட பாடசாலை சமூகம் பாராட்டியதுடன், எதிர்காலத்திலும் இத்தகைய ஒத்துழைப்புகள் தொடர வேண்டும் என நம்பிக்கை வெளியிட்டனர்.
No comments: