- தேசத்தின் முன்மாதிரியான சாதனையாளனுடன் கைகோர்ப்பு

இலங்கை தடகள வரலாற்றில் சாதனை படைத்த ஈட்டி எறிதல் விளையாட்டு வீரரான ரமேஷ் தரங்க பத்திரகேயின் உத்தியோகபூர்வ அனுசரணையாளராக உஸ்வத்த பிஸ்கட் தனியார் நிறுவனம் இணைந்து கொண்டுள்ளது. இது தொடர்பான விசேட பாராட்டு மற்றும் கெளரவிப்பு விழா, ரமேஷ் தரங்கவின் பிறப்பிடமான கென்னாத்துடாவிலுள்ள வின்ரோ வரவேற்பு மண்டபத்தில் கடந்த ஜூன் 22 ஆம் திகதி நடைபெற்றது.
இந்நிகழ்வில் அவரது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கிராம மக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.
இலங்கை தடகளத் துறையை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு சென்ற அவரது வரலாற்றுச் சாதனைகளைக் கெளரவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில், விளையாட்டுத் துறை பொறுப்பதிகாரிகள், சமூகத் தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பலரும் கலந்துகொண்டு ரமேஷின் சர்வதேச வெற்றிகளைப் பாராட்டினர்.
விளையாட்டு அரங்கில் ரமேஷ் தரங்க நிகழ்த்திய அசாதாரண சாதனைகள் இலங்கை தடகள வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளன. அவர் 2026 ஆம் ஆண்டு ஈட்டி எறிதல் போட்டியில் 92.62 மீற்றர் தூரம் எறிந்து புதிய தேசிய சாதனையைப் பதிவு செய்தார். இதன் மூலம் உலக தரவரிசையிலும் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றதுடன், ஒலிம்பிக் தகுதிக்கான தனது வாய்ப்பையும் வலுப்படுத்தியுள்ளார்.
அதேபோல், உலக தரவரிசையில் 86.57 மீற்றர் தூரத்தை எறிந்து மேலும் பல்வேறு போட்டிகளிலும் சிறப்பான பெறுபேறுகளைப் பதிவு செய்து வருகிறார். இதன் மூலம் இலங்கை தடகளத்திற்கு உலக அரங்கில் புதிய அங்கீகாரத்தைப் பெற்றுத்தந்துள்ளார்.
70 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்தைக் கொண்ட உஸ்வத்த பிஸ்கட் நிறுவனம், நாட்டின் முன்னணி உணவு உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக திகழ்வதுடன், சமூகப் பொறுப்புணர்வுடன் பல்வேறு தேசிய முயற்சிகளுக்கும் தொடர்ந்து பங்களித்து வருகிறது.
சந்தைகளில் தனது நிலையை வலுப்படுத்துவதுடன், சமூக மேம்பாட்டுத் திட்டங்களுக்கும் பங்களிப்பு வழங்கி வருகின்றது.
ரமேஷ் மற்றும் அவரது பயிற்சியாளர் சர்வதேச விளையாட்டுத் துறையில் ஈட்டிய வரலாற்றுச் சாதனைகளைப் பாராட்டி, உஸ்வத்த பிஸ்கட் நிறுவனத்தினால் ரமேஷ் தரங்க பத்திரகேவிற்கு 2.5 மில்லியன் ரூபா பணப்பரிசு வழங்கிக் கெளரவிக்கப்பட்டது. அத்துடன், அவரது வெற்றியின் பின்னால் உறுதுணையாக விளங்கிய பயிற்சியாளர் டோனி பிரசன்னவிற்கு 500,000 ரூபா பணப்பரிசும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்தக் கூட்டாண்மையானது ஒரு நீண்டகாலப் பயணத்தின் ஆரம்பத்தைக் குறிப்பதுடன், 2028 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக் போட்டிகள் வரை ரமேஷ் தரங்கவின் உத்தியோகபூர்வ அனுசரணையாளராக தொடர்ந்து செயற்பட உஸ்வத்த பிஸ்கட் நிறுவனம் உடன்படிக்கை செய்துள்ளது.
இலங்கைக்கு ஒலிம்பிக் பதக்கமொன்றைப் பெற்றுக்கொடுப்பதே ரமேஷின் இறுதி இலக்காகக் காணப்படும் நிலையில், அந்த இலக்கை அடையும் வரை அவருடன் கைகோர்த்து நிற்கப் போவதாக உஸ்வத்த நிறுவனம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இந்நிகழ்வானது வெறும் வெற்றிக் கொண்டாட்டமாக மட்டுமன்றி, அர்ப்பணிப்பும் விடாமுயற்சியும் மூலம் எத்தகைய சாதனைகளையும் படைக்க முடியும் என்ற வலுவான செய்தியை வருங்கால சந்ததியினருக்கு எடுத்துரைப்பதுடன், ஒட்டுமொத்த நாட்டிற்கும் ஊக்கமளிக்கும் நிகழ்வாகவும் அமைந்தது.
No comments: