News Just In

6/16/2026 06:06:00 PM

சட்டவிரோத பீடைநாசினிகளின் பயன்பாட்டைத் தடுக்கும் விழிப்புணர்வு நிகழ்வு!

சட்டவிரோத பீடைநாசினிகளின் பயன்பாட்டைத் தடுக்கும் விழிப்புணர்வு நிகழ்வு


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

பயிர்செய்கையில் சட்டவிரோத பீடைநாசினிகளின் பயன்பாட்டைத் தடுக்கும் விழிப்புணர்வு நிகழ்வு மட்டக்களப்பு - சத்துருக்கொண்டான் மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் செவ்வாயன்று 16.06.2026 இடம்பெற்றது.

இந்நிகழ்வு சட்டவிரோத பீடைநாசினிகளின் பயன்பாட்டினால் மாவட்டத்தில் ஏற்படும் தீங்கான விளைவுகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதுடன், விவசாய இரசாயன விற்பனையாளர்கள், விவசாய விரிவாக்க உத்தியோகத்தர்கள், பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினருக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்வைத் துவக்கி வைத்து அங்கு கருத்துத் தெரிவித்த மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் ஜே.எஸ். அருள்ராஜ் “விவசாயிகள் மத்தியில் இரசாயண பாவனை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி விவசாயத்தை வலுப்படுத்த வேண்டும்” என்றார்.

பயிர்ச்செய்கையில் பாதுகாப்பானதும் சட்டபூர்வமானதுமான பீடைநாசினிகளை பயன்படுத்தல், சட்டவிரோத பீடைநாசகள் பயன்பாட்டை தடுப்பதற்கான பொறிமுறைகளை வலுப்படுத்துவதற்கான தெளிவுகள் இந்த செயலமர்வில் வழங்கப்பட்டன.

பதிவாளர் அலுவலக தலைமை அதிகாரி கலாநிதி ஜே.பி மாரசிங்க பீடை நாசினி தொடர்பான சட்ட ஒழுங்குகள், சட்டவிரோத பீடைநாசிகளின் பயன்பாட்டினால் மனித ஆரோக்கியம், சுற்றுச்சூழல், உணவுப் பாதுகாப்பில் ஏற்படுத்தும் பாதிப்பு தொடர்பான விளக்கங்களை தெளிவுபடுத்தியதுடன் சட்ட விரோத பீடை நாசினிகளின் விற்பனையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது என்றும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு விவசாய விரிவாக்கல் பிரதிப் பணிப்பாளர் எம். பரமேஸ்வரன், விவசாயத் திணைக்கள அதிகாரிகள், விவசாயப் போதனாசிரியர்கள், விவசாய இரசாயன விற்பனையாளர்கள், பொலிஸார், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
.

No comments: