News Just In

6/20/2026 04:01:00 PM

நான் செய்த சமூக சேவைகளே என்னை பாராளுமன்ற உறுப்பினராக மாற்றியது – ஆதம்பாவா எம்.பி

நான் செய்த சமூக சேவைகளே என்னை பாராளுமன்ற உறுப்பினராக மாற்றியது – ஆதம்பாவா எம்.பி.


நூருல் ஹுதா உமர்

சமூக சேவையே என்னை ஒரு பாராளுமன்ற உறுப்பினராகவும், நாட்டின் உயர்மட்ட பொறுப்புகளை வகிக்கும் நிலைக்கும் கொண்டு வந்தது. சமூக சேவை என்பது வெறும் உதவிச் செயல் அல்ல, அது மனிதனை முழுமையான மனிதனாக உருவாக்கும் ஒரு உயர்ந்த பணியாகும். இளைஞர்கள் சமூகப் பணியின் அவசியத்தை உணர்ந்து சமூக மாற்றத்திற்காக தங்களை அர்ப்பணிக்க வேண்டும் என இலங்கை அரசியலமைப்பு பேரவை உறுப்பினரும் சாய்ந்தமருது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான நாடாளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா தெரிவித்தார்.

தேசிய சமூக அபிவிருத்தி நிறுவன சமூகப் பணி கற்கையின் இறுதியாண்டு மாணவர்களின் First-Hand Social Work Intervention Camp 2026 நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

தனது இளமைக்கால அனுபவங்களை நினைவுகூர்ந்த ஆதம்பாவா எம்.பி, பல்கலைக்கழகக் கல்வியை முடித்த பின்னர் வேலைவாய்ப்பின்மை காரணமாக பல சவால்களை எதிர்கொண்டதாகவும், அந்தக் காலகட்டத்தில் கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளை ஒருங்கிணைத்து இயக்கங்களை முன்னெடுத்ததாகவும் குறிப்பிட்டார்.

1990களின் இறுதியில் கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் அமைப்பை உருவாக்கி, பட்டதாரிகளின் உரிமைகளுக்காகப் போராடியதன் மூலம் சமூக சேவையின் உண்மையான அர்த்தத்தை உணர்ந்ததாகவும் அவர் கூறினார். அந்தப் போராட்டங்களே பின்னர் தனது தலைமைத்துவப் பயணத்திற்கான அடித்தளமாக அமைந்ததாகவும் தெரிவித்தார்.

“ஒரு சமூகத்தின் முன்னேற்றம் அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் மட்டும் ஏற்படாது. ஒவ்வொருவரும் தங்களது குடும்பம், கிராமம், பணியிடம் மற்றும் சமூகத்தின் மீது பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும். வீதியில் உள்ள ஒரு தடையை அகற்றுவதும் சமூக சேவையே. பிறருக்கு இடையூறு ஏற்படாத வகையில் நடப்பதும் சமூக சேவையே,” என அவர் விளக்கினார்.

சமூக சேவை இஸ்லாமிய போதனைகளிலும் முக்கிய இடம் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், எவ்வித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் மக்களுக்காகச் செய்யப்படும் பணியே உண்மையான சேவை எனச் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை, அரசாங்கத்தின் “பிரஜா சக்தி” வேலைத்திட்டத்தின் ஊடாக வறுமை ஒழிப்பு மற்றும் சமூக மேம்பாட்டுக்காக பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், கிராம மட்ட அபிவிருத்தித் திட்டங்கள் மக்களின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

நிகழ்வின் நிறைவில், சமூகப் பணி கற்கைகளைத் தொடரும் மாணவர்கள் தங்களை சமூக மாற்றத்தின் முன்னோடிகளாக உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றும், சமூக சேவையின் ஊடாகவே நிலையான மாற்றங்களையும் உண்மையான மனநிறைவையும் அடைய முடியும் என்றும் ஆதம்பாவா எம்.பி வலியுறுத்தினார்

No comments: