நூருல் ஹுதா உமர்
செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான அறிவையும் திறன்களையும் பொதுமக்களிடையே பரவலாக்கும் நோக்கில், அக்கரைப்பற்று மாநகர சபை மற்றும் ஹல்லாஜ் வள நிலையம் இணைந்து இலவச செயற்கை நுண்ணறிவு பயிற்சி நெறிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அக்கரைப்பற்று மாநகர முதல்வர் ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் தெரிவித்துள்ளார்.
“செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் – எமது மக்களின் எதிர்காலம்” என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். உலகம் வேகமாக டிஜிட்டல் மாற்றத்தை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அனைத்து துறைகளிலும் புதிய வாய்ப்புகளை உருவாக்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஆசிரியர்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் பாடத்திட்டங்கள், வினாத்தாள்கள் மற்றும் கற்றல் வளங்களை விரைவாக உருவாக்குவதோடு, மாணவர்களின் திறன்களுக்கு ஏற்ப கற்பித்தல் முறைகளையும் மேம்படுத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டினார். மாணவர்கள் செயற்கை நுண்ணறிவு அறிவைப் பெறுவதன் மூலம் எதிர்கால வேலைவாய்ப்புகளுக்குத் தயாராகி, உலகளாவிய போட்டித் திறனை வளர்த்துக்கொள்ள முடியும்.
மேலும், வர்த்தகர்கள் செயற்கை நுண்ணறிவு உதவியுடன் வியாபார வளர்ச்சி திட்டமிடல், வாடிக்கையாளர் சேவை மேம்பாடு, சமூக ஊடக விளம்பரங்கள் உருவாக்கம் மற்றும் ஆன்லைன் விற்பனையை அதிகரித்தல் போன்ற பல நன்மைகளைப் பெற முடியும். விவசாயிகளுக்கு பயிர் நோய்களை அடையாளம் காணுதல், காலநிலை தகவல்களைப் பெறுதல், விளைச்சலை அதிகரிக்கும் வழிமுறைகளை அறிதல் உள்ளிட்ட பல துறைகளில் செயற்கை நுண்ணறிவு உதவியாக அமையும்.
மீனவர்கள், கால்நடை மற்றும் பண்ணை வளர்ப்பாளர்களும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் வானிலை முன்னறிவிப்புகள், சந்தை விலைத் தகவல்கள் மற்றும் உற்பத்தித் திறன் மேம்பாட்டு ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள முடியும். டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஆர்வமுள்ள இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் சுயாதீன தொழில், மின்னியல் சந்தைப்படுத்தல், வரைகலை வடிவமைப்பு, உள்ளடக்க உருவாக்கம் மற்றும் தரவு உள்ளீட்டுப் பணிகள் போன்ற துறைகளில் உலகளாவிய வாடிக்கையாளர்களுடன் இணைந்து வருமானம் ஈட்டும் வாய்ப்புகளைப் பெற முடியும்.
அக்கரைப்பற்றை செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தில் முன்னணி நகரமாக மாற்றுவதே மாநகர சபையின் நோக்கமாகும் என தெரிவித்த முதல்வர், “ஒவ்வொரு வீட்டிலும் ஒரு டிஜிட்டல் திறனாளி உருவாக வேண்டும்; ஒவ்வொரு இளைஞனும் தொழில்நுட்ப அறிவுடன் வளர வேண்டும்; ஒவ்வொரு குடும்பமும் டிஜிட்டல் பொருளாதாரத்தின் பயனை அடைய வேண்டும்” என வலியுறுத்தினார்.
எனவே ஆசிரியர்கள், மாணவர்கள், வர்த்தகர்கள், விவசாயிகள், மீனவர்கள், பண்ணை வளர்ப்பாளர்கள், இளைஞர்கள் மற்றும் அனைத்து பொதுமக்களும் இந்த இலவச AI பயிற்சி நெறிகளில் பங்கேற்று தங்களது எதிர்காலத்தை வளப்படுத்திக் கொள்ளுமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
No comments: