கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலின்படி நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் விசேட டெங்கு ஒழிப்பு வாரத்தின் 6 ஆம் நாள் நடவடிக்கைகள் இன்று சாய்ந்தமருதில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டன.
டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதுடன், பொதுமக்களிடையே நோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இந்நிகழ்வின் ஒரு பகுதியாக, சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று டெங்கு கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்களின் வழிகாட்டல் மற்றும் மேற்பார்வையின் கீழ், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் நுளம்பு களத்தடுப்பு உதவியாளர்கள் இணைந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
பரிசோதனைகளின் போது, நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய அபாயகரமான இடங்கள் அடையாளம் காணப்பட்டு உடனடியாக சுத்தம் செய்யப்பட்டதுடன், தேங்கியிருந்த நீர் அகற்றப்பட்டு சுற்றுப்புறச் சூழலை சுகாதாரமான நிலையில் பராமரிப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன.
மேலும், வீட்டு உரிமையாளர்களுக்கு டெங்கு நோய் பரவலுக்கான காரணிகள், அதன் விளைவுகள் மற்றும் தடுப்பு வழிமுறைகள் தொடர்பாக விரிவான விழிப்புணர்வு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. குறிப்பாக, வாரந்தோறும் சுற்றுப்புறங்களை சுத்தம் செய்தல், நீர் தேங்கக்கூடிய பொருட்களை அகற்றுதல் மற்றும் நுளம்பு இனப்பெருக்க இடங்களை ஒழித்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் அவசியம் வலியுறுத்தப்பட்டது.
டெங்கு ஒழிப்பு என்பது சுகாதாரத் துறையின் பொறுப்பு மட்டுமல்லாது, சமூகத்தின் ஒவ்வொரு உறுப்பினரின் பங்களிப்பும் தேவைப்படும் பொதுச் சுகாதாரப் பொறுப்பாகும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டெங்கு இல்லா சாய்ந்தமருதை உருவாக்கும் நோக்கில் பொதுமக்கள் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குமாறும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
No comments: