
கரூரில் 3 ஆண்டுகளுக்கு முன்பு வருமானவரித் துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் மீது தற்போது நடவடிக்கை எடுப்பது ஏன் என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கரூரைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு: கரூரில் கடந்த 2023 மே 26-ல் எங்கள் அலுவலகத்தில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அங்கு வந்த திமுகவினர் வருமானவரித் துறை அதிகாரிகளைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும், தவறான வார்த்தைகளால் திட்டியதாகவும், அதிகாரிகளின் மடிக்கணினி மற்றும் 5 பென் டிரைவ்களை பறித்துச் சென்றதாகவும் கூறி வருமானவரித் துறை உதவி இயக்குநர் கிருஷ்ணகாந்த் போலீஸில் புகார் அளித்தார்.
இப்புகாரின்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் என்னையும் போலீஸார் சேர்த்துள்ளனர். ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் அரசியல் முன்விரோதம் காரணமாக என்னையும் வழக்கில் சேர்த்துள்ளனர். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறேன். எனவே, வழக்கில் கைதாகாமல் இருக்க முன்ஜாமீன் வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி தனபால் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், 2023-ல் சம்பவம் நடைபெற்றபோது மனுதாரர் அங்கு இல்லை. பிரச்சினை செய்யத் தூண்டியதாகவே மனுதாரர் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் முன்ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டது. அரசுத் தரப்பில், பதில் மனுத் தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கோரப்பட்டது.
அதற்கு நீதிபதி, இந்த வழக்கு 3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் போலீஸார் தற்போது தீவிரம் காட்டுவது ஏன், கொலை வழக்குகளிலேயே மறுநாள் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவகாசம் கோருவது ஏன் எனக் கூறி விசாரணையை இன்றைக்கு தள்ளி வைத்தார்.
தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கப்பட்ட வழக்கை கரூர் டவுன் போலீஸார் மீண்டும் விசாரணையை தொடங்கி உள்ளனர். இந்தச் சம்பவம் குறித்த விசாரணைக்காக அசோக்குமாரைத் தேடி கரூர் போலீஸார் சென்னைக்கு வந்து சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments: