காசாவிற்கு மனிதாபிமான உதவிகளை வழங்கிச் சென்றுகொண்டிருந்த “குளோபல் சுமுத்” கப்பல் குழுவை சர்வதேச கடல் பகுதியில் இஸ்ரேலிய இராணுவப் படைகள் இடைமறித்ததைத் தொடர்ந்து, அதில் பங்கேற்றிருந்த இலங்கை செயற்பாட்டாளர் திருமதி சமீரா மஹ்பூப்தீன் இஸ்ரேலிய அதிகாரிகளின் காவலில் இருப்பதாக வெளியாகும் செய்திகள் குறித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் ஆழ்ந்த கவலை வெளியிட்டு இது தொடர்பாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹெரத்துக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாக அக்கட்சியின் கல்விப்பிரிவு பொறுப்பாளர் அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினருமான எஸ்.எம். சபீஸ் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், வெளியுறவு அமைச்சர் விஜித ஹெரத்துக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் எழுதியுள்ள கடிதத்தில், 45 நாடுகளைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட மனிதாபிமான ஆர்வலர்களுடன் இணைந்து அமைதியான மற்றும் வன்முறையற்ற மனிதாபிமான பணியில் ஈடுபட்டிருந்த திருமதி சமீரா மஹ்பூப்தீனின் நல்வாழ்வு, சட்ட நிலை மற்றும் தற்போதைய இருப்பிடம் தொடர்பில் உறுதியற்ற நிலை காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், காசாவிலிருந்து சுமார் 250 கடல் மைல் தொலைவில் கப்பல் வழிமறிக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் பல செயற்பாட்டாளர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச தகவல்கள் தெரிவிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தச் சூழ்நிலையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட இலங்கைத் தூதரகங்கள் மற்றும் சர்வதேச இராஜதந்திர வழிமுறைகள் ஊடாக உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ரிஷாத் பதியுதீன் வலியுறுத்தியுள்ளதாகவும் திருமதி சமீரா மஹ்பூப்தீனின் உடல்நிலையைச் சரிபார்த்து, அவரது பாதுகாப்பையும் நல்வாழ்வையும் உறுதிப்படுத்தவும், தேவையான தூதரக அணுகலைப் பெற்றுத்தரவும், அவரை பாதுகாப்பாக இலங்கைக்கு மீள அழைத்துவர தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தாமதமின்றி முன்னெடுக்கப்பட வேண்டும் என அவர் அரசை கோரியுள்ளதாகவும் சபீஸ் தெரிவித்தார்.
அமைச்சின் சரியான நேரத்திலான மற்றும் தீர்க்கமான தலையீடு, அவரது குடும்பத்தினருக்கும் இலங்கை மக்களுக்கும் நம்பிக்கையளிக்கும் எனவும் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
No comments: