News Just In

5/22/2026 04:32:00 PM

மேட்டூர் அருகே காவிரி கரையில் அகழாய்வுப் பணியை தொடங்கிய தொல்லியல்துறை

மேட்டூர் அருகே காவிரி கரையில் அகழாய்வுப் பணியை தொடங்கிய தொல்லியல்துறை





மேட்டூர் அருகே தெலுங்கனூரில் அகழாய்வு பணி தொடங்கப்பட்டுள்ள நிலையில், அரிய வகை பொருட்கள் கிடைக்கும் என தொல்லியல் துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மேட்டூரை அடுத்த கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட தெலுங்கனூர் காவிரி கரையோரப் பகுதியில் அமைந்துள்ளது. தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை 2025-2026-ன் படி அகழாய்வு மேற்கொள்ள தேர்வு செய்யப்பட்டது. இந்த இடம் 1990 வரை அடர்ந்த வனப்பகுதியாக இருந்துள்ளது. அணை நீர்மட்டம் சரியும் போது, அப்பகுதியில் ஏராளமான புதைகுழிகளும், கல் வட்டங்கள் இருப்பதை காண முடியும். இந்த கல் வட்டங்கள் உள்ளூர் மக்களால் ‘பாண்டியன் திட்டுகள்’ என அழைக்கப்படுகின்றன.

இப்பகுதியில் தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ததில் வாள், அம்பு, முதுமக்கள் தாழி, பெரிய மற்றும் சிறிய அளவிலான பானை மற்றும் கருவிகள் கிடைத்துள்ளன. இதையடுத்து, அப்பகுதியில் தொல்லியல் துறையினர் கள ஆய்வு செய்து விரிவான அறிக்கை அளித்ததன் பேரில் தமிழக அரசு அப்பகுதியில் முறையான அகழாய்வு செய்ய முடிவெடுத்தது. தற்போது அணை நீர்மட்டம் சரிந்துள்ள நிலையில் அகழாய்வு பணிகளை தொல்லியல் துறையினர் தொடங்கியுள்ளனர்.

இதுகுறித்து தொல்லியல் துறை அதிகாரிகள் கூறியதாவது: இறந்து போனவர்களின் உடல்களை தடிமனான சுடு மண் பானைகளில் வைத்து நிலத்தில் குழி தோண்டி புதைத்து விடுவார்கள். இவை முதுமக்கள் தாழி என அழைக்கப்படுகிறது. அதில் இறந்து போனவர்களின் உடல்கள் மட்டுமின்றி அவர்கள் பயன்படுத்தி வந்த பொருட்களும் புதைக்கப்படும்.

முதுமக்கள் தாழிகளைச் சுற்றி கற்களை பதித்து வைப்பதால், கல் வட்டங்கள் (பாண்டியன் திட்டு) என அழைக்கப்படுகிறது. இப்பகுதியில் 1,000-க்கும் மேற்பட்ட கல் வட்டங்கள் உள்ளன. இப்பகுதியில் ஆய்வுகள் தொடங்கிய நிலையில் பல்வேறு காரணங்களால் பல கல் வட்டங்கள் சேதமடைந்துள்ளன.

முதற்கட்டமாக 77 கல் வட்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் 40-க்கும் மேற்பட்டவை நல்ல முறையில் உள்ளன. இதில் 10 கல் வட்டங்களை தேர்வு செய்து அகழாய்வு பணி தொடங்கப்பட்டுள்ளது.


தற்போது வரை நடந்த பணியில் முதுமக்கள் தாழி, பானை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொல்லியல் துறை அதிகாரிகள் மூலம் முழுமையாக ஆய்வு செய்யும் போது கீழடி, சிவகளை போல பழமையான பொருட்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தெலுங்கனூரில் நடத்தப்படும் அகழாய்வு மூலம் சிறிய அளவிலான முதுமக்கள் தாழி, பானை இருப்பதால் எலும்புகள், அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் உள்ளிட்டவை கிடைக்கும். குறிப்பாக புதிய கற்கால மனிதர்கள் மற்றும் இரும்பு கால மனிதர்கள் வரலாறு தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

எஃகு வாளால் தொடங்கிய அகழாய்வு:

மேட்டூரை அடுத்த கருங்கலூரை சேர்ந்தவரும், தொல்லியல் ஆய்வாளரான ரமேஷ் ஆராய்ச்சி படிப்பின்போது மேற்கொண்ட ஆய்வில் பெரிய அளவிலான வாள் கிடைத்துள்ளது. இதனை முழுமையாக ஆராய்ச்சி செய்த போது சுமார் 3,500 ஆண்டு பழமையானது மற்றும் எஃகு பொருளால் ஆனது என தெரியவந்தது. இதன் காரணமாக, தெலுங்கனூர் காவிரி கரையில் அகழாய்வு மேற்கொள்ள அரசு அனுமதி வழங்கியது.

No comments: