இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற குழு தலைவர் இரா. சாணக்கியன் ஆகியோரை காரைதீவு பிரதேச சபை தவிசாளர் எஸ். பாஸ்கரன் சந்தித்து முக்கிய கலந்துரையாடல் ஒன்றை இன்று மேற்கொண்டார்.
இச்சந்திப்பு களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் இல்லத்தில் இடம்பெற்றதுடன், இலங்கை தமிழரசுக் கட்சியின் கிளைப்புனரமைப்பு நடவடிக்கைகள், தமிழர் உரிமைசார் அரசியல் விடயங்கள், காரைதீவு பிரதேசத்தின் அபிவிருத்தித் தேவைகள் உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
மேலும், காரைதீவு பகுதியில் கல்வி மேம்பாட்டை வலுப்படுத்துதல், மாணவர்களுக்கான வசதிகளை அதிகரித்தல், இளைஞர்களுக்கான திறன் அபிவிருத்தி வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கான திட்டங்களை முன்னெடுத்தல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக, தற்போதைய அரசியல் மற்றும் சமூக சூழ்நிலையில் தமிழர் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டிய அவசியம் குறித்து கருத்துக்கள் பரிமாறப்பட்டதுடன், மக்களின் அடிப்படை தேவைகள் மற்றும் பிரதேச முன்னேற்றம் தொடர்பில் ஒருங்கிணைந்த செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியதன் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் எதிர்காலத்தில் மக்கள் நலனையும் பிரதேச முன்னேற்றத்தையும் மையப்படுத்திய பல்வேறு செயற்பாடுகளை இணைந்து முன்னெடுக்க ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
No comments: