“ஐயூஎம்எல் சார்பில் ஏ.எம்.ஷாஜகானை அமைச்சரவையில் சேர்க்க முடிவு” - காதர் மொகிதீன்
தவெக தலைமையிலான அமைச்சரவையில் ஐயூஎம்எல் இடம் பெறும் என்றும், பாபநாசம் தொகுதி எம்எல்ஏ ஏ.எம்.ஷாஜகானை அமைச்சராக சேர்க்க பரிந்துரைத்துள்ளோம் என்றும் அக்கட்சியின் தலைவர் காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.
தவெக தலைமையிலான அரசுக்கு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயுஎம்எல்)-ன் இரண்டு எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்திருந்தனர். இதையடுத்து, அமைச்சரவையில் ஐயூஎம்எல் இடம்பெற வேண்டும் என்றும், இரண்டு எம்எல்ஏக்களில் ஒருவரை அமைச்சராக்க விரும்புவதாகவும், அந்த ஒருவரை தெரியப்படுத்துமாறும் விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இது தொடர்பாக ஆலோசிக்க ஐயூஎம்எல் மாநில நிர்வாகிகளின் அவசரக் கூட்டம் கட்சியின் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காதர் மொகிதீன், “இன்றைய கூட்டத்தில் மூன்று முக்கிய செய்திகள் பரிமாறப்பட்டன. தமிழகத்தில் தவெக ஆட்சி உருவாக்கப்பட்டிருக்கிறது. இதற்கு ஐயூஎம்எல்-ன் இரண்டு உறுப்பினர்கள் நிபந்தனையற்ற ஆதரவை தெரிவித்தனர். தற்போது ஆட்சி சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆதரவு கொடுத்த நேரத்தில் எந்த நிபந்தனையையும் நாங்கள் வைக்கவில்லை; எந்தக் கோரிக்கையையும் தெரிவிக்கவில்லை.
இருந்தாலும் முதல்வர் ஜோசப் விஜய், பெருந்தன்மையோடு ஐயூஎம்எல்-ஐ அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ள முடிவெடுத்திருப்பதாகவும், உங்கள் இரண்டு எம்எல்ஏக்களில் ஒருவரை அமைச்சரவையில் சேர்க்க முடிவெடுத்திருப்பதாகவும், அதற்கு உங்கள் ஒப்புதல் வேண்டும் என்றும் என்னிடம் கேட்டார்.
இது எங்களுக்கு எதிர்பாராத ஒரு செய்தி. நாங்கள் கேட்கவும் இல்லை, கோரிக்கையும் வைக்கவில்லை. இருந்தபோதும், எங்கள் கட்சியை அமைச்சரவையில் சேர்க்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் பெருந்தன்மையோடு எங்களை அணுகியதற்காக நாங்கள் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம்.
இதுபற்றி நாங்கள் கலந்து பேசினோம். எங்கள் கட்சியின் அரசியல் ஆலோசனைக் குழுவின் தலைவராக இருப்பவர் கேரளத்தின் தலைவர் சயது சாதிக் அலி ஷியாப்தங்கல். அவர், நபிகள் நாயகத்தின் 38வது வாரிசு. அவரும், கேரள அமைச்சரும் கட்சியின் தேசிய பொதுச் செயலாளருமான குஞ்சாலிகுட்டியும் சேர்ந்து இது தொடர்பான கட்சியின் முடிவை நேற்று அறிவித்தார்கள். அது தொடர்பாக நாங்களும் ஆலோசனை மேற்கொண்டோம். இதில், தவெக தலைமையிலான தமிழக அரசில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும் இடம்பெறுவதை ஆதரிப்பது என முடிவெடுத்துள்ளோம்.
இன்றைய கூட்டத்தில், ஐயூஎம்எல்-ன் இரண்டு எம்எல்ஏக்களுக்கும் அமைச்சரவையில் ஏன் இடம் கேட்கக் கூடாது என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. இதற்கு, முதலில் ஒருவரை அமைச்சரவையில் சேர்ப்போம். அதன் பிறகு இரண்டாவது எம்எல்ஏவை அமைச்சரவையில் சேர்ப்பது குறித்து கேட்போம் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இருவரில் யாரை அமைச்சரவையில் இடம்பெறச் செய்வது என்பது குறித்த முடிவை எடுக்கும் அதிகாரம் எனக்கு (காதர் மொகிதீன்) வழங்கப்பட்டது. அதன்படி, பாபநாசம் தொகுதி எம்எல்ஏ ஏ.எம்.ஷாஜகானை அமைச்சரவையில் சேர்க்க முடிவெடுத்திருக்கிறோம். கூட்டணி குறித்து தேர்தல் காலத்தில் முடிவு செய்வோம்” என தெரிவித்தார்.
No comments: