News Just In

5/29/2026 12:37:00 PM

சட்டவிரோத குப்பை கொட்டலுக்கு எதிராக காரைதீவு பிரதேச சபை அதிரடி

சட்டவிரோத குப்பை கொட்டலுக்கு எதிராக காரைதீவு பிரதேச சபை அதிரடி

நூருல் ஹுதா உமர்

காரைதீவு பிரதான வீதியில் சட்டவிரோதமாக குப்பை கொட்டிய நபரொருவருக்கு எதிராக காரைதீவு பிரதேச சபை மற்றும் பொலிஸார் இணைந்து இன்று (29) அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இன்று காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில், வீதியோரத்தில் குப்பை கொட்டிய நபரை பொதுமக்கள் நேரடியாக பிடித்து, காரைதீவு பிரதேச சபை தவிசாளர் சு. பாஸ்கரன் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து தவிசாளரின் உடனடி அறிவுறுத்தலின் பேரில், பிரதேச சபை உத்தியோகத்தர்களும் பொலிஸ் உத்தியோகத்தர்களும் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதன்போது, குறித்த நபருக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், அவர் கொட்டியிருந்த குப்பைகளை அவராலேயே உடனடியாக அகற்றுமாறும் பொலிஸார் உத்தரவிட்டனர்.

சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த காரைதீவு பிரதேச சபை தவிசாளர் சு. பாஸ்கரன், “இனிவரும் காலங்களில் இவ்வாறான சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக எவ்வித பாரபட்சமும் இன்றி நீதிமன்றின் ஊடாக கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என எச்சரித்துள்ளார்.

மேலும், காரைதீவு பிரதேசத்தை தூய்மையாகவும் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் பேணுவதற்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்

No comments: