சீர் செய்யுமாறு கோரி கையெழுத்து வேட்டை
தேசிய மக்கள் சக்தி எம்பியும் பங்கேற்பு
ஏறாவூர் நகர பிரதேசத்திலுள்ளோரும், அந்நகருக்கு வருகை தருவோரும் என தினமும் பல நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் மக்கள் வங்கியின் ஏரிஎம் இயந்திரம் வாரத்தில் நான்கு நாட்கள் பழுதாகி விடுகிறது.
இதனை மக்கள் வங்கியின் தலைமை அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வந்து சீர் செய்யும் வகையில் கையெழுத்து வேட்டை இடம்பெற்றது. இதில் தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு எம்பி கந்தசாமி பிரபுவும் கலந்து கொண்டு மக்களின் கோரிக்கை மனுவில் கையெழுத்திட்டார்.
இது குறித்து ஆர்வலர்களான பிரதேச இளைஞர்கள் மக்கள் வங்கியின் பிராந்திய முகாமையாளருக்கு வேண்டுகோள மனுவொன்றை எழுதியுள்ளனர்.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஏறாவூர் நகரத்தையும் அதனைச் சுற்றியுள்ள சுமார் 7 கிலோமீட்டர் வரையான கிராமங்களையும் உள்ளடக்கிய பகுதிகளில் வசிக்கும் சுமார் 50,000 க்கும் மேற்பட்ட மக்களின் சார்பாகவும் இந்நகருக்கு வரும் கிழக்குப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் வர்த்தகர்கள் ஆகியோர் சார்பாக இந்த மகஜரை சமர்ப்பிக்கின்றோம்.
எமது பிரதேசத்தில் வாழும் பெருமளவிலான அரச உத்தியோகத்தர்கள், வர்த்தகர்கள், தொழில்முனைவோர், பல்கலைக்கழக மாணவர்கள், அரச உதவிகளைப் பெறும் பயனாளிகள், அஸ்வெசும பயனாளிகள், அன்றாடத் தொழிலாளர்கள் எனப் பல்லாயிரக்கணக்கானோர் மக்கள் வங்கியின் நீண்டகால வாடிக்கையாளர்களாக இருந்து வருகின்றனர்.
எனினும், கடந்த பல வருட காலமாக மக்கள் வங்கியின் ஏறாவூர் கிளையிலுள்ள ஒரேயொரு ஏ.ரீ.எம் இயந்திரத்தில் நிலவி வரும் தொழில்நுட்பச் சிக்கல்கள் எமது மக்களின் இயல்பு வாழ்க்கையை வெகுவாகப் பாதித்துள்ளது.
இங்கு பொருத்தப்பட்டுள்ள ஏ.ரீஎம். இயந்திரம் வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு குறையாமல் பழுதடையும் நிலையிலேயே காணப்படுகின்றது.
இதனால் தூர இடங்களிலிருந்து பெரும் சிரமங்களுக்கு மத்தியில் பயணம் செய்து ஏறாவூர் மக்கள் வங்கிக்கு வரும் ஏழை எளிய மக்கள், முதியவர்கள், பெண்கள் தமது அத்தியாவசியத் தேவைகளுக்கான பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் அவல நிலை தொடர்கின்றது.
குறிப்பாக வார இறுதி நாட்களிலும், இரவு நேரங்களிலும் ஏற்படும் இவ்வாறான கோளாறுகள் பொதுமக்களைப் பெரும் நெருக்கடிக்கு உள்ளாக்குகின்றன.
மேலும், ஏறாவூர் நகரம் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஒரு முக்கிய வர்த்தக மையமாக விளங்கும் நிலையில், இங்கு இதுவரையில் பணம் வைப்பிலிடும் CRM / CDM பொருத்தப்படாமை பெரும் குறையாகவே இருந்து வருகின்றது.
ஏறாவூர் மக்கள் வங்கிக் கிளையில் இவ்வாறான அடிப்படை வசதிகள் இல்லாமை நவீன வங்கிச் சேவைக்கே சவாலாக அமைந்துள்ளது. வர்த்தகர்களும் ஏனைய வாடிக்கையாளர்களும் வங்கி நேரத்தைத் தாண்டி பணம் வைப்பிலிடுவதற்கு வழியில்லாத நிலை உள்ளது.
ஆகவே, தற்பொழுதுள்ள பழுதடைந்த இயந்திரந்திரத்திற்குப் பதிலாக புதிய, நவீன ஏரீஎம் இயந்திரங்களை உடனடியாகப் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,
அத்துடன் பணம் வைப்பிலிடும் வசதியுடன் கூடிய சீஆர்எம் இயந்திரம் ஒன்றினை நிறுவ வேண்டும்.
மேலும், இயந்திரங்கள் பழுதடையும் பட்சத்தில் அவற்றை உடனடியாகத் திருத்தியமைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு கோருகின்றோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments: