News Just In

5/29/2026 10:19:00 AM

பாடசாலை மாணவி கர்ப்பம் ; சகோதரன் உட்பட இருவர் கைது

பாடசாலை மாணவி கர்ப்பம் ; சகோதரன் உட்பட இருவர் கைது


வழக்கம் போல விடிந்த காலைப் பொழுது அது. பத்தாம் வகுப்பில் படிக்கும் அந்த 15 வயதுச் சிறுமி, எந்தவித பதற்றமும் இல்லாமல், கையில் புத்தகப் பையோடு தினசரி பாடசாலைக்குச் சென்று வந்து கொண்டிருந்தாள். வீட்டில் உள்ளவர்களுக்கோ, சுற்றியுள்ளவர்களுக்கோ அவளது நடவடிக்கைகளில் எவ்வித சந்தேகமும் எழவில்லை. ஆனால், அந்தப் பிஞ்சு உடலுக்குள் ஒரு பெரும் துயரமும், பேரதிர்ச்சியும் மறைந்திருக்கும் என்று அவளது தாயார் சொப்பனத்திலும் நினைத்திருக்க மாட்டார்.

ஒருநாள் திடீரென தனக்குக் கடுமையான வயிற்று வலி இருப்பதாக அந்தச் சிறுமி தாயாரிடம் கூறியுள்ளார். சாதாரண வலி என்று நினைத்து பதறிய தாய், மகளை சிகிச்சைக்காக அருகில் உள்ள வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

ஆம், அந்த 15 வயதுச் சிறுமி ஏழரை மாதக் கர்ப்பிணியாக இருப்பது மருத்துவப் பரிசோதனையில் கண்டறியப்பட்டது. அதுவரை எவ்விதப் பதற்றமுமின்றி அந்தப் பெண் குழந்தை வழக்கம்போலப் பாடசாலைக்குச் சென்று வந்துள்ளமைதான் இங்கு பலரையும் உலுக்கியுள்ளது.

யாழ்ப்பாணம், இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டத்தரிப்பு, பனிப்புலம் பகுதியிலேயே இக்கோடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

தன் மகள் கர்ப்பமாக இருக்கும் விபரத்தை அறிந்து நிலைகுலைந்து போன தாயார், கணப்பொழுதும் தாமதிக்காமல் உடனடியாக மகளை இளவாலை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று கண்ணீரோடு முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டைத் தொடர்ந்து, சிறுமியைப் பாதுகாப்பாகப் பொறுப்பேற்ற பொலிஸார், அவருக்கு முறையான மருத்துவப் பரிசோதனைகளைச் செய்து முடித்து, மிகவும் சாதுரியமாக வாக்குமூலத்தைப் பெற்றுக்கொண்டனர். அப்போது அச்சிறுமி பயந்து நடுங்கியபடி கூறிய உண்மைகள், அங்கிருந்த பொலிஸ் அதிகாரிகளையே உலுக்கியது.

தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியது வேறு யாருமல்ல; தனது சொந்தத் தாயாரின் சகோதரியின் மகனான (ஒன்றுவிட்ட சகோதரன்) ஒருவனும், அவனது நண்பனும்தான் என்ற உண்மையை உடைத்துள்ளார். அவர்கள் இருவரும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் தன்னை மிரட்டி, கட்டாயப்படுத்திப் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கியதாக அம்மாணவி வாக்குமூலம் அளித்துள்ளார்.

சிறுமியின் வாக்குமூலத்தை அடுத்து, இளவாலை பொலிஸார் அதிரடி வேட்டையில் இறங்கினர். இக்குற்றச்சம்பவத்துடன் தொடர்புடைய 17 மற்றும் 20 வயதுடைய இரு இளைஞர்களைப் பொலிஸார் உடனடியாகக் கைது செய்து கம்பிக்குப் பின்னால் தள்ளியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தற்போது உரிய மருத்துவப் பராமரிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இச்சம்பவம் குறித்துப் பேசியுள்ள பொலிஸார், "பாதிக்கப்பட்ட சிறுமி குழந்தை பிரசவித்த பின்னர், பிறக்கும் குழந்தைக்கு டி.என்.ஏ. (DNA) பரிசோதனை செய்யப்படும். அந்த அறிவியல் பூர்வ அறிக்கையின் அடிப்படையில் குற்றவாளிகளுக்குக் கடுமையான மேலதிக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளனர்.

பாடசாலை சீருடை களையும் முன்பே, ஒரு சிறுமி தாயாகப் போகும் இந்த அவலம் யாழ். குடாநாட்டில் பெரும் பரபரப்பையும், பெற்றோரிடையே பெரும் அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது

No comments: