
ஐபிஎல் தொடரில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 9 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 3 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. அந்த அணி தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில் வெற்றி பெற்று அசத்தி உள்ளது.
நடப்பு சீசனில் அதிக ரன்கள் குவித்துள்ள வீரர்களின் பட்டியலில் அபிஷேக் சர்மா 2-வது இடத்திலும், ஹெய்ன்ரிச் கிளாசன் 3-வது இடத்திலும் உள்ளனர். இதில் அபிஷேக் சர்மா ஒரு சதம், 3 அரை சதங்களுடன் 425 ரன்கள் குவித்துள்ளார். அவரது ஸ்டிரைக் 209.35 ஆகும். 40 பவுண்டரிகளையும், 31 சிக்ஸர்களையும் பறக்கவிட்டுள்ளார்.
அதேவேளையில் கிளாசன் 4 அரை சதங்களுடன் 414 ரன்கள் சேர்த்துள்ளார். அவரது ஸ்டிரைக் ரேட் 157.41 ஆகும். 32 பவுண்டரிகளையும், 18 சிக்ஸர்களையும் விளாசியுள்ளார். 3 அரை சதங்களுடன் 197.46 ஸ்டிரைக் ரேட்டுடன் 321 ரன்கள் சேர்த்துள்ள இஷான் கிஷனும் தனது அதிரடியால் ஆட்டத்தின் போக்கை மாற்றும் திறன் கொண்டவர். டிராவிஸ் ஹெட், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 30 பந்துகளில் 76 ரன்கள் விளாசி பார்முக்கு திரும்பியிருந்தார்.
அவரது அதிரடியால் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 244 ரன்கள் இலக்கை துரத்திய ஹைதராபாத் அணி 8 பந்துகளை மீதம் வைத்து வெற்றி கண்டிருந்தது. பின் வரிசையில் நித்திஷ் குமார் ரெட்டி, சலீல் அரோரா ஆகியோரும் மட்டையை சுழற்றக்கூடியவர்களாக உள்ளனர். இதனால் இன்றைய ஆட்டத்தில் ஹைதராபாத் அணியின் பேட்டிங் வரிசை, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சு துறைக்கு கடும் சவால்தரக்கூடும்.
ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை பொறுத்தவரையில் பிரஃபுல் ஹிங்கே, இஷான் மலிங்கா, ஷகிப் ஹுசைன், நித்திஷ் குமார் ரெட்டி ஆகியோர் நம்பிக்கை அளிக்கும் வகையில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இவர்களுடன் பாட் கம்மின்ஸின் வருகையும் கூடுதல் பலம் சேர்த்துள்ளது.
அஜிங்க்ய ரஹானே தலைமையிலான கொல்கத்தா அணி 8 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 5 தோல்வி, ஒரு முடிவு இல்லாத ஆட்டம் என 5 புள்ளிகளை பெற்று பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது. தனது முதல் 6 ஆட்டங்களில் ஒரு வெற்றியைகூட பெற முடியாமல் கொல்கத்தா அணி தவித்தது. எனினும் அந்த அணி கடைசியாக விளையாடிய 2 ஆட்டங்களிலும் வெற்றி கண்டு மீண்டு வந்துள்ளது. இதனால் இன்றைய ஆட்டம் விறுவிறுப்பாக அமையக்கூடும்.
நடப்பு சீசன் கொல்கத்தா அணிக்கு சிறப்பானதாக அமையவில்லை என்ற போதிலும் அணி நிர்வாகம் ரஹானேவை கேப்டனாகத் தொடரச் செய்துள்ளது. எனினும் இதுவரை அவர், தனது அணியை வழிநடத்திச் செல்வதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் தனது பேட்டிங் அணுகுமுறையில் ரஹானே மாற்றத்தை காட்டி வருகிறார்.
No comments: