News Just In

5/03/2026 05:48:00 PM

சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலயத்தின் 75ஆம் ஆண்டு பூர்த்தி விழா தொடக்கம் – பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் அறிவிப்பு

சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலயத்தின் 75ஆம் ஆண்டு பூர்த்தி விழா தொடக்கம் – பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் அறிவிப்பு



நூருல் ஹுதா உமர்

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலயத்தின் 75ஆம் ஆண்டு பூர்த்தி (பவள விழா) நிகழ்வுகளின் தொடக்கமும், அதனை ஒட்டிய ஊடக சந்திப்பும் இன்று (03) பாடசாலை கேட்போர் கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது.

பாடசாலை அதிபர் எம். எம். ஹிர்பஹான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பாடசாலையின் கல்வி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டை முன்னிறுத்தும் பல முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அதன் அடிப்படையில், புனர் நிர்மாணம் செய்யப்பட்ட முன்பள்ளி கட்டிடம், நவீன வசதிகளுடன் கூடிய விஞ்ஞான ஆய்வுக்கூடம் மற்றும் பல்லூடக மற்றும் ஆங்கிலப் பிரிவு ஆகியவை விரைவில் திறந்து வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், பாடசாலையின் பெயரை “அல் ஜலால் மகாவித்தியாலயம்” என மாற்றுவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது.

75ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு, நடைபவனி, நினைவு மலர் வெளியீடு, பழைய மாணவர்கள் ஒன்றுகூடல், கவியரங்கு, கட்டுரை மற்றும் விவாதப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், மாணவர் திறன்கள் வெளிப்படுத்தும் கண்காட்சிகள், விளையாட்டு நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன. சமூக நலத்திட்டங்களாக மருத்துவ முகாம் போன்ற நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.

இதனுடன், பவள விழா நினைவு சின்னமும் அறிமுகப்படுத்தப்பட்டதுடன், விழாவை முன்னிட்டு சிறப்பு மேலங்கி வெளியீடும் இடம்பெறவுள்ளது.

பல தசாப்தங்களாக கல்வித் துறையில் சிறந்து விளங்கி, சமூகத்திற்கு பல்வேறு சாதனையாளர்களை உருவாக்கிய கல்வி நிலையமாக அல் ஜலால் வித்தியாலயம் திகழ்கிறது. கல்விசார் முன்னேற்றத்துடன் மட்டுமல்லாமல், மாணவர்களின் ஒழுக்கம், தலைமைத்திறன் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வளர்க்கும் பணியிலும் இந்நிறுவனம் முக்கிய பங்காற்றி வருகிறது.

இவ்விழா, பாடசாலையின் வரலாற்றுப் பயணத்தை மீள்பார்க்கும் ஒரு முக்கிய தருணமாக மட்டுமல்லாமல், கல்வி முன்னேற்றம் மற்றும் சமூக ஒற்றுமையை வலுப்படுத்தும் நிகழ்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிகழ்வில் பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு பிரதிநிதிகள், பழைய மாணவர்கள் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழா ஏற்பாடுகள் தொடர்பாக விளக்கமளித்தனர்.

மேலும், உலகம் முழுவதும் வாழும் பழைய மாணவர்கள், பெற்றோர், நலன்விரும்பிகள் மற்றும் சமூக அங்கத்தினர்கள் அனைவரும் இணைந்து பவள விழாவை வெற்றிகரமாக கொண்டாட ஒத்துழைக்குமாறு பாடசாலை நிர்வாகம் திறந்த அழைப்பை விடுத்துள்ளது. பவள விழாவின் முக்கிய நோக்கங்களாக,

பாடசாலையின் வரலாற்றை உலகறியச் செய்தல், மாணவர்களிடையே பற்றுணர்வை உருவாக்குதல், நவீன கல்வி வசதிகளை மேம்படுத்துதல், பெற்றோர் மற்றும் பழைய மாணவர்களின் பங்களிப்பை வலுப்படுத்துதல், இணைப்பாட செயற்பாடுகளை ஊக்குவித்தல், மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணருதல், ஆசிரியர்களை ஊக்குவித்தல், சேர்க்கை வீதத்தை உயர்த்துதல் மற்றும் பாடசாலை – சமூக உறவை பலப்படுத்துதல் ஆகியவை இவ்விழாவின் முக்கிய நோக்கங்களாக அமைந்துள்ளன.

No comments: