News Just In

5/29/2026 07:31:00 AM

பகிரப்பட்ட பாரம்பரியத்தின் ஊடாக நல்லிணக்கத்திற்கான புதிய உரையாடல்

பகிரப்பட்ட பாரம்பரியத்தின் ஊடாக நல்லிணக்கத்திற்கான புதிய உரையாடல்


“பகிரப்பட்ட பாரம்பரியத்தின் ஊடாக அமைதிக்கட்டமைப்பு மற்றும் நல்லிணக்கத்தில் மத பன்மைத்துவத்தின் பலன்கள்” எனும் தலைப்பில் நடைபெற்ற முக்கியமான கருத்தரங்கிலும் அதனுடன் இணைந்த கலந்துரையாடல்களிலும் நான் பங்கேற்றது மிகவும் அர்த்தமிக்க அனுபவமாக அமைந்தது.

போரால் பாதிக்கப்பட்ட பெண்கள் சங்கம் (Association of War Affected Women - AWAW) ஏற்பாடு செய்த இந்த நிகழ்வு, 2026 மே 27 ஆம் திகதி பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை, கொழும்பு 07 இல் அமைந்துள்ள பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் (BMICH) Cinema Lounge அரங்கில் நடைபெற்றது.

இந்த நிகழ்வு வெறும் கருத்தரங்காக மட்டும் இல்லாமல், இன, மத மற்றும் கலாசார வேறுபாடுகளைத் தாண்டி, இலங்கையின் பகிரப்பட்ட வரலாற்று மற்றும் பாரம்பரிய அடையாளங்கள் எவ்வாறு சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்கும் அடித்தளமாக அமைய முடியும் என்பதை ஆராய்ந்த ஒரு முக்கியமான அறிவியல் மற்றும் சமூக உரையாடலாக அமைந்தது.

நிகழ்வின் ஆரம்பத்தில் AWAW அமைப்பின் தலைவரான திருமதி விசாகா தர்மதாசா அவர்கள் வரவேற்புரையையும் சுருக்கமான அறிமுகத்தையும் வழங்கினார். அதன் பின்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியரான பேராசிரியர் கலிங்க டியூடர் சில்வா அவர்கள் “எங்கள் பயணம்” என்ற தலைப்பில் தனது விளக்கவுரையை வழங்கினார். சமுதாயங்களுக்கிடையேயான நம்பிக்கை, புரிதல் மற்றும் கலாசார ஒற்றுமை எவ்வாறு கட்டியெழுப்பப்பட வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து பேராதனைப் பல்கலைக்கழக தொல்லியல் துறைத் தலைவரும் மத்திய கலாசார நிதியத்தின் ஆலோசகர் இயக்குநருமான பேராசிரியர் அருண ராஜபக்ஷ அவர்கள் முக்கிய உரையை நிகழ்த்தினார். இலங்கையின் பல்வேறு வரலாற்று தளங்கள் மற்றும் பாரம்பரிய அடையாளங்கள் எந்த ஒரு இனத்திற்கோ மதத்திற்கோ மட்டுப்படுத்தப்பட்டவை அல்ல; அவை இந்த நாட்டின் அனைத்து மக்களுக்கும் சொந்தமான பொதுப் பாரம்பரியங்கள் என்பதைக் குறிப்பிடத்தக்க வகையில் அவர் எடுத்துரைத்தார்.

தொடர்ந்து தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமான டாக்டர் சேனரத் விக்ரமசிங்க அவர்கள் கருத்துரையாற்றினார். தொல்லியல் மற்றும் பாரம்பரிய பாதுகாப்பு என்பது வெறும் கற்கள் மற்றும் நினைவுச் சின்னங்களைப் பாதுகாப்பதல்ல; அது சமூகங்களின் நினைவுகளையும் வரலாற்று உண்மைகளையும் பாதுகாக்கும் செயற்பாடாகும் என்று அவர் வலியுறுத்தினார்.

அதன்பின் “Shared Heritage as a Corridor for Peace” எனும் ஆவணப்படம் திரையிடப்பட்டது. அந்த ஆவணப்படம், பகிரப்பட்ட பாரம்பரியங்கள் எவ்வாறு மக்களை இணைக்கும் பாலமாகவும் அமைதிக்கான பாதையாகவும் மாறுகின்றன என்பதை தெளிவாக வெளிப்படுத்தியது.

நிகழ்வின் பிரதம விருந்தினராக இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பின் நிரந்தர ஒருங்கிணைப்பாளரான திரு மார்க் ஆண்ட்ரே ஃப்ராஞ்சே அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார். சமூக நல்லிணக்கம், கலாசார மரியாதை மற்றும் பரஸ்பர புரிதல் ஆகியவை நீடித்த சமாதானத்திற்கான முக்கிய அடிப்படைகள் என அவர் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து “எல்லைகளைத் தாண்டி: அமைதிக்கான பாதையாக பகிரப்பட்ட பாரம்பரியம்” என்ற தலைப்பில் முக்கிய கலந்துரையாடல் நடைபெற்றது. இந்த கலந்துரையாடலில் டாக்டர் சேனரத் விக்ரமசிங்க, பேராசிரியர் அருண ராஜபக்ஷ, ராஜரட்ட பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் துசித மெண்டிஸ், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் டாக்டர் ஜீவசுதன் சுப்பிரமணியம் மற்றும் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் டாக்டர் உதித ஜினதாச ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர்.

இந்த கலந்துரையாடலை தொல்லியல் முதுநிலைப் பட்டப்படிப்பு நிறுவனத்தின் மூத்த பேராசிரியர் ஜகத் வீரசிங்க அவர்கள் வழிநடத்தினார். குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கின் வரலாற்று மற்றும் கலாசார பாரம்பரியங்கள் தேசிய நல்லிணக்க செயற்பாடுகளில் உரிய அங்கீகாரம் பெற வேண்டிய அவசியம் பற்றியும் பல முக்கியமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் எங்களுடைய கட்சியின் பொதுச் செயலாளர் அவர்களும் நானும் கலந்து கொண்டிருந்தோம். குறிப்பாக, தொடர்ச்சியாக நாம் வெளிப்படுத்தி வரும் வடக்குநாரிமலை, மட்டக்களப்பு குசலானமலை போன்ற முக்கியமான இடங்கள் தொடர்பான விடயங்களும் இந்த விவாதங்களில் உள்ளடக்கப்பட்டிருந்தன.


மிக முக்கியமாக, இந்த நாட்டில் பௌத்த மதத்தைப் பின்பற்றிய தமிழர்களும் வாழ்ந்திருக்கின்றார்கள் என்பதையும், அந்த வரலாற்று மற்றும் கலாசார மரபுரிமை சார்ந்த இடங்களை முழுமையாக சிங்கள பௌத்த மக்களுக்கு மட்டும் சொந்தமானவை எனக் கூறுவது தவறான அணுகுமுறை என்பதையும் பலரும் தங்களுடைய கருத்துக்களின் மூலம் வெளிப்படுத்தியிருந்தனர். இந்த விவாதங்கள் தமிழ் மக்களின் வரலாற்று அடையாளங்களும் பாரம்பரியங்களும் உரிய முறையில் அங்கீகரிக்கப்பட வேண்டிய அவசியத்தை மேலும் வலுப்படுத்தின.

அந்த வகையில் தமிழ் மக்களின் உரிமைகள் மற்றும் வரலாற்று அடையாளங்களை பாதுகாப்பதற்காக இலங்கை தமிழரசுக் கட்சி தொடர்ச்சியாக தனது நிலைப்பாட்டை முன்வைத்து வருகின்றது என்பதை இந்த இடத்தில் மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றேன்.

அதேபோல், நேற்றைய தினம் மாகாண சபைத் தேர்தல் தொடர்பான ஒரு முக்கியமான கலந்துரையாடலும் நடைபெற்றது. Peripheral அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட அந்த சந்திப்பில் உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டிய அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது. மேலும், மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்காக நான் முன்வைத்த தனிநபர் சட்டமூலத்தை பயன்படுத்தக்கூடிய ஒரு நடைமுறை வழிமுறையாக எடுத்துக்கொள்ளலாம் என்பதையும் நாங்கள் தெளிவுபடுத்தினோம். அந்த சந்திப்பில் அதற்கான ஒரு இணக்கப்பாடும் எட்டப்பட்டது.

இவ்வாறான பல முக்கியமான அரசியல், சமூக மற்றும் மக்கள் சார்ந்த விடயங்கள் தொடர்பாக இந்த வாரம் முழுவதும் கொழும்பில் பல்வேறு சந்திப்புகள் மற்றும் கலந்துரையாடல்களை நாங்கள் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றோம்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டபோது, இந்த நாட்டில் உண்மையான நல்லிணக்கமும் நிலையான சமாதானமும் உருவாக வேண்டுமெனில், ஒவ்வொரு சமூகத்தினதும் வரலாறு, மதம், மொழி மற்றும் கலாசார அடையாளங்கள் சமமான மரியாதையுடன் அணுகப்பட வேண்டும் என்ற எண்ணம் மேலும் வலுப்பெற்றது.

பகிரப்பட்ட பாரம்பரியங்கள் என்பது கடந்த கால நினைவுகளாக மட்டும் இல்லாமல், எதிர்கால தலைமுறைகளை ஒன்றிணைக்கும் சக்தியாகவும் அமையக்கூடியவை. அந்த அடிப்படையில் இவ்வாறான கருத்தரங்குகள் மற்றும் அறிவியல் உரையாடல்கள் நாட்டின் நல்லிணக்கப் பயணத்தில் முக்கிய பங்காற்றுகின்றன.

எங்களுடைய தமிழ் மக்களின் அரசியல், சமூக, கலாசார மற்றும் நில உரிமை சார்ந்த பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வுகளை பெற்றுத்தருவது தான் இலங்கை தமிழரசுக் கட்சியின் அடிப்படை நோக்கும் அபிலாஷையும் என்பதை இந்த இடத்தில் நான் தெளிவாக கூற விரும்புகின்றேன்.

இந்த அர்த்தமிக்க நிகழ்வை ஏற்பாடு செய்த போரால் பாதிக்கப்பட்ட பெண்கள் சங்கத்தினருக்கும், கலந்து கொண்டு தங்கள் அறிவையும் அனுபவங்களையும் பகிர்ந்துகொண்ட அனைத்து பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் மற்றும் சமூக பிரதிநிதிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


No comments: