சிறந்த பெறுபேறுகளை பெற்ற கல்முனை சாஹிறா தேசிய பாடசாலை அதிபருக்கு பாடசாலையில் கெளரவிப்பு
கல்முனை சாஹிறா தேசிய பாடசாலையின் மாணவர்கள் அண்மையில் நடைபெற்ற க.பொ.த. (உயர்தரம்) பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றதை முன்னிட்டு, பாடசாலையின் அதிபர் எம்.ஐ.ஜாபிர் உள்ளிட்ட கல்வியியல் குழுவினருக்கு கெளரவிப்பு நிகழ்வு ஒன்று இன்று (02) சிறப்பாக நடைபெற்றது.
பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், குழுவின் செயலாளர் பொறியியலாளர் எம்.ஐ.எம்.றியாஸ் தலைமையில் உறுப்பினர்கள் பாடசாலைக்கு வருகை தந்து, மாணவர்களின் சாதனைக்கு பின்னால் அயராத முயற்சிகளை மேற்கொண்ட அதிபர், பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், பகுதித் தலைவர்கள் மற்றும் ஆசிரியர்களை பாராட்டினர்.
இதன்போது, அதிபர் எம்.ஐ.ஜாபிர் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி மகத்தான கெளரவம் வழங்கப்பட்டதுடன், நினைவுப் பரிசில்களும் அளிக்கப்பட்டன. மேலும், நிகழ்வின் நிறைவாக இனிப்புப் பண்டங்கள் பரிமாறப்பட்டன. மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக அயராத முயற்சிகளை மேற்கொள்ளும் கல்வியாளர்களை கௌரவிக்கும் இத்தகைய நிகழ்வுகள், கல்வி துறையில் ஊக்கத்தை அதிகரிக்கும் முக்கியமான முயற்சிகளாகக் கருதப்படுகின்றன.
இந்நிகழ்வு பாடசாலை சமூகத்திற்குள் மகிழ்ச்சியையும் பெருமையையும் ஏற்படுத்தியதோடு, எதிர்கால கல்வி சாதனைகளுக்கான உற்சாகத்தையும் உருவாக்கியுள்ளது.
No comments: