News Just In

4/30/2026 11:27:00 AM

உழ்ஹிய்யா விவகாரத்தில் சமூக நல்லிணக்கத்தையும் அரசியலமைப்பையும் முன்னிறுத்தி சுமூகத் தீர்வை வலியுறுத்துகிறோம் : ஸ்ரீலங்கா ஜனநாயகக் கட்சி


உழ்ஹிய்யா விவகாரத்தில் சமூக நல்லிணக்கத்தையும் அரசியலமைப்பையும் முன்னிறுத்தி சுமூகத் தீர்வை வலியுறுத்துகிறோம் : ஸ்ரீலங்கா ஜனநாயகக் கட்சி



நூருல் ஹுதா உமர்

இலங்கையில் சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமையும் மத நல்லிணக்கமும் நாட்டின் நிலைத்தன்மைக்கான அடிப்படைத் தூண்களாகும் என்பதை முன்னிறுத்தி, ஸ்ரீலங்கா ஜனநாயகக் கட்சி, உழ்ஹிய்யா தொடர்பான தற்போதைய நிலைமை குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிடுகிறது.

ஸ்ரீலங்கா ஜனநாயகக் கட்சி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும், இம்முறை வெசாக் வாரம் 2026 மே மாதம் 27 ஆம் திகதி முதல் ஜூன் 2 ஆம் திகதி வரை அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதே காலப்பகுதியில் முஸ்லிம் சமூகத்தின் புனித ஈதுல் அல்ஹா (ஹஜ்ஜுப் பெருநாள்) மே 28 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இஸ்லாமிய மதக் கடமைகளின் முக்கிய அங்கமாகிய உழ்ஹிய்யா, “அய்யாமுத் தஷ்ரீக்” எனப்படும் துல்ஹஜ் பிறை 10 முதல் 13 வரை, குறிப்பாக மே 28 முதல் மே 31 அஸர் நேரம் வரை செய்யப்பட வேண்டிய கட்டாய மதச் செயற்பாடாகும்.

எனினும், இக்காலப்பகுதியில் மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் பொது நிர்வாக அமைச்சின் விசேட வர்த்தமானி அறிவித்தலின் அடிப்படையில் இறைச்சிக்காகப் பிராணிகளை அறுப்பதும், விற்பனை செய்வதும் தடைசெய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் உழ்ஹிய்யா கடமையை நிறைவேற்றுவது தொடர்பில் சட்ட ரீதியான மற்றும் நிர்வாக ரீதியான குழப்பநிலை உருவாகியுள்ளது.

இந்த நிலைமையால் சமூக மட்டத்தில் தேவையற்ற சர்ச்சைகள் மற்றும் தவறான புரிதல்கள் உருவாகும் அபாயம் காணப்படுவதுடன், மத உணர்வுகளையும் சமூக ஒற்றுமையையும் பாதிக்கக்கூடிய சூழல் உருவாகும் வாய்ப்பும் காணப்படுகிறது.

இலங்கையின் அரசியலமைப்பின் 10 மற்றும் 14(1)(e) பிரிவுகள் மத சுதந்திரத்தையும், மதப் பின்பற்றலுக்கான உரிமையையும் உறுதி செய்கின்றன. அதேபோல், நாட்டின் பல்துறை சமூக அமைப்பில் அனைத்து மதங்களும் சம மரியாதையுடன் பேணப்பட வேண்டும் என்பதும் அரசியலமைப்பின் அடிப்படை நோக்கமாகும். இந்நிலையில், ஒரு மதக் கடமையின் நடைமுறை நிறைவேற்றம் நிர்வாக நடவடிக்கைகளால் பாதிக்கப்படுவது தொடர்பில் உரிய மறுஆய்வு அவசியமாகிறது.

மேலும், இஸ்லாமிய மதக் கோட்பாடுகளின்படி உழ்ஹிய்யா என்பது தனிப்பட்ட விருப்பம் மட்டுமல்லாது, குறிப்பிட்ட நிபந்தனைகளுக்குட்பட்டவர்களுக்கு கட்டாய கடமையாகும். எனவே, அதனை நிறைவேற்றுவதற்கான காலப்பகுதியில் ஏற்படும் நிர்வாகத் தடைகள் குறித்து மத அறிஞர்கள், அரச அதிகாரிகள் மற்றும் சமூக பிரதிநிதிகள் இணைந்து பரிசீலனை செய்ய வேண்டும்.

இந்தப் பின்னணியில், வெசாக் போயா தினமும் ஹஜ்ஜுப் பெருநாளும் ஒரே காலப்பகுதியில் இடம்பெறுவது போன்ற விசேட சூழ்நிலையை கருத்தில் கொண்டு, எந்த சமூகத்தையும் பாதிக்காத வகையில், சமநிலையும் நல்லிணக்கமும் பேணப்படும் வகையில் சுமூகமான தீர்வொன்றை உடனடியாக பெற்றுக்கொடுக்குமாறு ஸ்ரீலங்கா ஜனநாயகக் கட்சி, மகத்தான மரியாதையுடன் ஜனாதிபதியிடமும் சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளிடமும் வேண்டுகோள் விடுக்கிறது.

அனைத்து சமூகங்களின் மத உரிமைகளையும் பாதுகாத்து, நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையில் தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும் என்பதே இக்கட்சியின் உறுதியான நிலைப்பாடாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments: