News Just In

4/30/2026 11:30:00 AM

இளவயது மரணங்களை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த தேசிய நடவடிக்கை அவசியம் – வுமென்ஸ் கோர்ப்ஸ் வலியுறுத்தல்

இளவயது மரணங்களை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த தேசிய நடவடிக்கை அவசியம் – வுமென்ஸ் கோர்ப்ஸ் வலியுறுத்தல்


நூருல் ஹுதா உமர்

நாட்டில் அதிகரித்து வரும் இளவயது மரணங்களை கட்டுப்படுத்த சுகாதாரத் துறையினர் உடனடி மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வுமென்ஸ் கோர்ப்ஸ் அமைப்பின் தலைவி றிகாஸா ஷர்பீன் வலியுறுத்தினார்.

சாய்ந்தமருது வொலிவேரியன் எம்.எஸ். காரியப்பர் வித்தியாலயத்தின் கூட்ட மண்டபத்திற்காக ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியான கதிரைகள் வழங்கும் நிகழ்வு இன்று பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம். ஆரிப் தலைமையில் நடைபெற்றது. வுமென்ஸ் கோர்ப்ஸ் அமைப்பின் நிதியுதவியுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

நாட்டில் பதிவாகும் மொத்த மரணங்களில் சுமார் 83 சதவீதம் தொற்றா நோய்களால் ஏற்படுகின்றன என்பது தற்போதைய நிலைமைக்கான தீவிரத்தைக் காட்டுகிறது. உணவு பழக்கவழக்கங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் சந்தையில் அதிகரித்து வரும் கலப்பட உணவுப் பொருட்கள் காரணமாக மக்கள் நீரிழிவு, இதய நோய், உயர் இரத்த அழுத்தம் போன்ற நீண்டகால நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

பெண்களை இத்தகைய தொற்றா நோய்களிலிருந்து பாதுகாக்கும் வகையில் ஒவ்வொரு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் பெண்களுக்கான உடற்பயிற்சி நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும், இது தொடர்பாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருடன் விரைவில் கலந்துரையாட திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இளவயது மரணங்களை கட்டுப்படுத்துவதில் பாடசாலைகளும் முக்கிய பங்காற்ற வேண்டும் என வலியுறுத்திய அவர், மாணவர்களுக்கு ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்கள் குறித்த விழிப்புணர்வு கல்வி வழங்கப்பட வேண்டும் என்றும், உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு நடவடிக்கைகள் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்றும் கூறினார். மேலும், பாடசாலை வளாகங்களில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் தரம் முறையாக கண்காணிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

சந்தையில் அதிகரித்து வரும் கலப்பட உணவுப் பொருட்களை கட்டுப்படுத்தும் நோக்கில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், நுகர்வோர் அதிகார சபை உள்ளிட்ட அமைப்புகள் மேற்கொண்டு வரும் திடீர் பரிசோதனைகள் பாராட்டத்தக்கவை என்றும், அவை தொடர்ச்சியாக நடைபெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இளவயது மரணங்களை குறைக்கும் நோக்கில் சுகாதார அமைச்சு, கல்வி அமைச்சு, சமூக அமைப்புகள், பாடசாலைகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து செயல்படும் விரிவான தேசிய வேலைத்திட்டம் அவசியம் எனவும் வுமென்ஸ் கோர்ப்ஸ் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்நிகழ்வில் அமைப்பின் செயலாளர் எஸ்.எம். முபிதா, உறுப்பினர் ஆசிரியை ஏ.எம். அஸ்மினா, பாடசாலை பிரதி அதிபர் எம்.ஆர். றினுபா மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments: