இரண்டு வார கால போர் நிறுத்தத்துக்கு ஈரானும் அமெரிக்காவும் சம்மதித்துள்ள நிலையில், சர்வதேச அமைதிக்கு இது ஒரு மகத்தான நாள் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்ரூத் சோஷியல் சமூக ஊடகப் பதிவில், “உலக அமைதிக்கு இது ஒரு மகத்தான நாள். ஈரானும் இதைத்தான் விரும்புகிறது. அவர்களுக்குப் போதும் என்றாகிவிட்டது. மற்ற அனைவருக்கும்கூட அதே நிலைதான். ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் கையாள்வதில் அமெரிக்கா உதவும். அங்கு ஏராளமான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் நடைபெறும். பெரும் பொருளாதார ஆதாயத்தை ஈட்ட முடியும்.
ஈரான் தனது மறுசீரமைப்புப் பணிகளைத் தொடங்க முடியும். அனைத்தும் சிறப்பாக நடைபெறுவதை உறுதிசெய்யும் பொருட்டு, நாங்கள் அனைத்து வகையான விநியோகப் பொருட்களையும் திரட்டிக்கொண்டு அங்கே காத்திருப்போம். அனைத்தும் சிறப்பாகவே நடக்கும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். அமெரிக்காவில் நாம் தற்போது அனுபவித்து வருவதைப் போலவே மத்திய கிழக்கு நாடுகளுக்கும் இது ஒரு பொற்காலமாக அமையக்கூடும்” என தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் நிறுத்தத்தை ஐக்கிய நாடுகள் சபை வரவேற்றுள்ளது. இது தொடர்பாக ஐ.நா. பொதுச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே அறிவிக்கப்பட்டுள்ள இரண்டு வார கால போர் நிறுத்தத்தை ஐ.நா. வரவேற்கிறது. மேற்கு ஆசியாவில் மோதலில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் சர்வதேச சட்டத்தின் கீழ் தங்களுக்குள்ள கடமைகளை நிறைவேற்ற வேண்டும்; இந்த பிராந்தியத்தில் நீடித்த மற்றும் விரிவான அமைதி நிலவ வழிவகுக்கும் வகையில் போர் நிறுத்த விதிகளை கடைப்பிடிக்க வேண்டும்.
பொதுமக்களின் உயிரைப் பாதுகாப்பதற்கும், மனிதத் துயரங்களைப் போக்குவதற்கும் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவது மிக அவசரத் தேவை. இந்த போர் நிறுத்தத்தில் துணை நின்ற பாகிஸ்தான் மற்றும் பிற நாடுகளின் முயற்சிகளுக்கு மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஈரானுடனான போர் நிறுத்தம் ஒரு அரசியல் பேரழிவு என்று இஸ்ரேலின் முக்கிய எதிர்க்கட்சி விமர்சித்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியின் தலைவரான யாயிர் லாபிட் தனது எக்ஸ் பக்கத்தில், “நமது முழு வரலாற்றிலும் இதுபோன்ற ஒரு அரசியல் பேரழிவு நிகழ்ந்ததே இல்லை. நமது தேசிய பாதுகாப்பு தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டபோது பேச்சுவார்த்தை மேஜைக்கு அருகில் கூட இஸ்ரேல் இல்லை. ராணுவம் தனக்கு இடப்பட்ட அனைத்து உத்தரவுகளையும் நிறைவேற்றியது. பொதுமக்களும் குறிப்பிடத்தக்க மன உறுதியை வெளிப்படுத்தினர். ஆனால், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அரசியல் ரீதியாகவும், உத்தி சார்ந்தும் தோல்வி அடைந்துவிட்டார். அவர் நிர்ணயித்த இலக்குகளில் எதையும் அவர் அடையவில்லை” என்று விமர்சித்துள்ளார்.
அதேநேரத்தில், பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர், ஜெர்மன் வெளியுறவு அமைச்சர் ஜோஹன் வாடேபுல் உள்ளிட்டோர் வரவேற்றுள்ளனர். போர் நிறுத்தத்தை வரவேற்றுள்ள ரஷ்யா, எனினும் இனி கச்சா எண்ணெய் மலிவு விலையில் கிடைக்காது என தெரிவித்துள்ளது.
No comments: