
ஆறு வாரங்களுக்கு மேலான போரின் மூலம் இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரான் ஆட்சியின் “அடித்தளங்களை குலைத்துவிட்டன” என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், தெரிவித்துள்ளார்.
அதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த இரு வார போர்நிறுத்தத்திற்குப் பின்னரும், வாஷிங்டனுடன் இஸ்ரேலின் ஒத்துழைப்பு முந்தையதை விட அதிகமாக உள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளில் இஸ்ரேல் முக்கிய இலக்குகளை எட்டியுள்ளது என்றும், நாடு “முன்பைவிட பலமாக” உள்ளது என்றும் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இன்னும் நிறைவேற்ற வேண்டிய இலக்குகள் உள்ளன என்றும், தேவையான எந்த நேரத்திலும் மீண்டும் போருக்கு திரும்பத் தயார் எனவும் அவர் தெரிவித்தார்.
பாகிஸ்தான் மேற்கொண்ட கடைசி நேர முயற்சிகளின் விளைவாக உருவான போர்நிறுத்தம் குறித்து, தன்னை ஆச்சரியப்படுத்தவில்லை என்றும் அவர் கூறினார்.
இந்த ஒப்பந்தம் இஸ்ரேலுடன் முழுமையான ஒருங்கிணைப்பில் செய்யப்பட்டதாகவும், “எங்களை கடைசி நேரத்தில் யாரும் ஆச்சரியப்படுத்தவில்லை” என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
இந்த இரு வார “தற்காலிக போர்நிறுத்தம்” இஸ்ரேலின் இலக்குகளை அடையும் பாதையில் ஒரு கட்டமாக மட்டுமே உள்ளது என்றும், அது இறுதி அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, ஈரான் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது, அதன் பலவீன நிலையை காட்டுகிறது என்றும் நெதன்யாகு கூறினார்.
ஹோர்முஸ் நீரிணையை திறந்ததோடு, தடைகள் நீக்கம், இழப்பீடு, நிரந்தர போர்நிறுத்தம் மற்றும் லெபனான் தொடர்பான கோரிக்கைகள் உள்ளிட்ட பல கோரிக்கைகளை ஈரான் கைவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆனால், ஈரானின் Fars News Agency இதற்கு முரணான தகவலை வெளியிட்டு, லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்களுக்கு பதிலளிப்பாக ஹார்முஸ் நீரிணையில் எண்ணெய் கப்பல்கள் செல்லும் போக்குவரத்தை மீண்டும் நிறுத்தியதாக தெரிவித்தது.
மேலும், ஹிஸ்புல்லா மீது இஸ்ரேல் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்பது ஈரானின் நிலைப்பாடு என்றும் கூறப்பட்டது.
அதே நேரத்தில், அமெரிக்கா–இஸ்ரேல் உறவு மத்திய கிழக்கு அரசியலை மாற்றிவருகிறது என்றும், இரு நாடுகளுக்கிடையேயான கூட்டாண்மை வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு வலுவாக உள்ளது என்றும் நெதன்யாகு தெரிவித்தார்
No comments: