News Just In

4/03/2026 05:04:00 AM

யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர் கொலை - சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்!

யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர் கொலை - சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்!



யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர் கொலை வழக்கில் கைதான இரண்டு சந்தேக நபர்களையும் எதிர்வரும் ஏப்ரல் மாதம்16ம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அண்மையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்தமருத்துவ துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கொலை செய்யப்பட்டு தனங்கிளப்பு பகுதியில் உருக்குலைந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சிரேஷ்ட விரிவுரையாளரின் மருமகன் மற்றும் மகள் ஆகியோர் கைது செய்யப்பட்டு இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இன்று மீண்டும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சட்டத்தரணி பெனிஸ்லஸ் துஷான் ஆகியோரும், இரண்டாவது சந்தேக நபராக பெயர் குறிப்பிடப்பட்ட சிரேஷ்ட விரிவுரையாளரின் மகள் சார்பில் சட்டத்தரணி சமந்த அத்துக்கோரள உள்ளிட்ட மூன்று சட்டத்தரணிகளும் ஆஜராகினர்.

முதலாவது சந்தேக நபரான சிரேஷ்ட விரிவுரையாளரின் மருமகன் சார்பில் சட்டத்தரணிகள் எவரும் மன்றில் ஆஜராகவில்லை.

இரண்டாவது சந்தேக நபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சமந்த அத்துக்கோரள நீண்ட சமர்ப்பணத்தை முன்வைத்து விண்ணப்பங்களை செய்ததுடன்,

முதலாவது சந்தேக நபரும் இரண்டாம் சந்தேக நபரும் சட்டரீதியாக திருமணம் செய்த போதும், முதலாவது சந்தேக நபரின் உடல் உள துன்புறுத்தல் காரணமாக இரண்டாம் சந்தேக நபர் மணநீக்கம் செய்யும் முடிவை எடுத்து அது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

இரண்டாவது சந்தேக நபரின் வாக்குமூலத்தை பெறுவது தொடர்பாக சட்ட வைத்திய அதிகாரியிடம் முற்படுத்தி உளநிலையை உறுதிப்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.

கொலை வழக்கு தொடர்பாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் வரை எவரும் ஒரு தீர்மானத்துக்கு வரமுடியாது என தெரிவித்த சட்டத்தரணி, யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் நாளாந்த பத்திரிகையொன்றில் வெளியான தலைப்புச் செய்தியை சுட்டிக்காட்டி அது தொடர்பாக கேள்வி எழுப்பினார்.

முதலாவது சந்தேக நபரால் வழங்கப்பட்ட வாக்குமூலம் பத்திரிகையொன்றில் முன்பக்க தலைப்பு செய்தியாக வெளிவந்துள்ளது. சந்தேக நபரால் வழங்கப்பட்ட வாக்குமூலம் குற்றப்பத்திரத்தில் தாக்கல் செய்யப்படாமல் வெளிப்படுத்தக் கூடாது என்பது விதி. அது நியாயமான விசாரணையை பாதிப்புக்குள்ளாக்கும்.

ஊடகங்களில் வெளிவந்த செய்தி நீதிமன்றத்தை அவமதிப்பதாக உள்ளது. குறித்த செய்தியானது சமூக வலைத்தளங்கள், சமூக ஊடகங்கள் வாயிலாகவும் பதிவு செய்யப்பட்டிருந்தது.

இரண்டாவது சந்தேக நபர் போதைப் பொருளுக்கு அடிமையானவர் எனவும் தவறான விடயங்கள் பரப்பப்பட்டது. சில ஊடகங்கள் கூட செய்திகளை தவறாக திரிபுபடுத்தி வெளியிட்டது. இது தொடர்பில் நீதிமன்றம் ஊடகங்களுக்கு பொது எச்சரிக்கை ஒன்றை விடுக்க வேண்டும் என சமர்ப்பணம் செய்தார்.

இதேவேளை குறித்த கொலை வழக்கு தொடர்பாக சுயாதீனமான விசாரணை வேண்டும் என பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை விடுத்தார்.

தனது சமர்ப்பணங்களை தொடர்ந்து முன்வைத்த ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன், கடந்த வழக்குத் தவணையின் போது சந்தேக நபர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டபோது பாதிக்கப்பட்ட தரப்பின் சார்பிலேயே நான் ஆஜராகினேன்.

சந்தேக நபர்கள் சார்பில் சட்டத்தரணிகள் எவரும் ஆஜராகவில்லை என்பது நீதிமன்ற பதிவேட்டிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு விடயங்கள் இருக்க பொய்யாக இரண்டாம் சந்தேக நபருக்காக நான் ஆஜராகியதாக பல செய்திகள் பிரசுரமானது.

அது மட்டுமில்லாமல் உயிரிழந்த விரிவுரையாளரின் மகன் என்னிடம் செய்த விண்ணப்பத்துக்கமைய உயிரிழந்தவரின் மகளை இறுதிச்சடங்கில் பங்கேற் வைப்பது தொடர்பாக பொலிஸாருக்கு தெரியப்படுத்தினேன்.

ஆனாலும் நான் இரண்டாம் சந்தேக நபரை பங்கேற்கச் செய்வதற்காக நீதிமன்ற உத்தரவை பெற்றேன் என தவறாக செய்திகள் வெளியானது. நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பாக தவறாக செய்திகளை பிரசுரிப்பது நீதிமன்ற அவமதிப்பாகும்.

பெரிய குற்ற செயல் இடம் பெற்றுள்ளது. விசாரணை ஆரம்பமாகி நடைபெறுகின்ற வேளையிலே இது சம்பந்தமாக பிரசுரிக்க கூடாத மற்றும் பொய்யான தகவல்கள் வெளிவருவது விசாரணைக்கு பாதிப்பாக அமையும். இது சம்பந்தமாக பாதிக்கப்பட்ட தரப்பாக ஆழமான கரிசனை எமக்கு உண்டு. இதைக் கருத்தில் எடுத்து மன்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உயிரிழந்த விரிவுரையாளரின் வீட்டில் எடுத்த தடயப் பொருட்கள் உள்ளிட்ட சிலவற்றை நீதிமன்றம் ஊடாக நாம் பொலிஸாரிடம் சமர்ப்பிக்கின்றோம். புலன் விசாரணை தங்கு தடையின்றி நடக்க பொலிஸ் விசாரணைக்கு அவை தேவையோ இல்லையோ, அவற்றை நாம் ஒப்படைக்கின்றோம்

இறந்த விரிவுரையாளர் கடந்த காலங்களில் செய்த முறைப்பாடு சம்பந்தமாகவும் சந்தேக நபர்கள் தொடர்பில் நிலுவையில் உள்ள வழக்குகள் சம்பந்தமாகவும் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன் என்றார்.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று வருவதுடன் கைப்பற்றப்பட்ட சான்றுப் பொருட்களை அரசாங்கப் பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

மூன்று தரப்புக்களின் சமர்ப்பணங்களையும் ஆராய்நத யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ்.லெனின்குமார், சந்தேக நபர்கள் இருவரையும் எதிர்வரும் ஏப்ரல் 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

மேலும் இரண்டாம் சந்தேக நபர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளிப்பதற்கான மனநிலையில் உள்ளாரா என்பதை உறுதிப்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு சட்ட வைத்திய அதிகாரிக்கு பணிப்புரை விடுத்தார்.

அத்துடன் ஊடகங்களின் செய்தி அறிக்கையிடல் வழக்கின் தன்மையை பாதிப்பதாக மன்றின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் செய்தி பிரசுரிப்பவர்கள் இது தொடர்பில் அவதானமாக செயல்பட வேண்டும். பத்திரிகை பிரசுரிக்கும் விடயம் நீதிமன்ற விசாரணையை பாதித்து நீதிமன்ற செயற்பாடுகளை குழப்புவதாக அமைந்தால் அது நீதிமன்ற அவமதிப்பதாக கருதப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

No comments: