
புத்தாண்டுக்காகத் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்யும் பொதுமக்களுக்கு வசதியளிக்கும் வகையில் விசேட போக்குவரத்துச் சேவைகள் இன்றும் இயக்கத்தில் உள்ளன.
வழக்கமான நேர அட்டவணைக்கு அப்பால் சுமார் 1,500 மேலதிக பேருந்துகள் இயக்கப்படுவதாக இலங்கை போக்குவரத்துச் சபை (SLTB) தெரிவித்துள்ளது.
தேவைக்கேற்ப பயன்படுத்துவதற்காக, கொழும்பைச் சுற்றியுள்ள பணிமனைகளில் 50 பேருந்துகள் கொண்ட ஒரு தொகுதி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணியாளர் நாயகம் நீலன் மிராண்டா, பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பஸ்தியன் மாவத்த, கடவத்த, மக்கும்புர மற்றும் கடுவெல ஆகிய இடங்களிலிருந்து மாகாணங்களுக்கு இடையேயான பேருந்துச் சேவைகள் இயக்கப்படுவதாகக் குறிப்பிட்டார்.
புத்தாண்டுக்காகப் பயணம் செய்பவர்களுக்கான விசேட தொடருந்து சேவை ஏப்ரல் 19 ஆம் திகதி வரை இயக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, கொழும்பு கோட்டை – அனுராதபுரம், அனுராதபுரம் – காங்கேசன்துறை, மரதானா – மாத்தறை மற்றும் மரதானா – பெலியத்த ஆகிய இடங்களுக்கு இடையே விசேட தொடருந்துகள் இயக்கப்படுகின்றன.
வழக்கமாக பெலியத்தாவிலிருந்து மஹோவிற்கு இயக்கப்படும் ராஜரத ரெஜினி தொடருந்து, புத்தாண்டு காலத்தில் அனுராதபுரம் வரை நீட்டிக்கப்படும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், வழக்கமாக கொழும்பு கோட்டையிலிருந்து மஹோவிற்கு இயக்கப்படும் மஹோ அலுவலக தொடருந்தும் இன்று அனுராதபுரத்திற்கு இயக்கப்பட உள்ளது.
இந்த விசேட தொடருந்துசேவைகள், கொழும்பிலிருந்து தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளுக்கும், கொழும்புக்குத் திரும்பும் பயணிகளுக்காகவும் இயக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments: