News Just In

3/25/2026 08:21:00 PM

மின்சாரம், எரிபொருள் சிக்கனம் அவசியம்: அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் அறிவுறுத்தல்

மின்சாரம், எரிபொருள் சிக்கனம் அவசியம்: அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் அறிவுறுத்தல்


நூருல் ஹுதா உமர்

தற்போதைய பொருளாதார சூழ்நிலையை முன்னிட்டு, மின்சாரம் மற்றும் எரிபொருள் பயன்பாட்டைச் சிக்கனமாகக் கடைப்பிடிக்குமாறு அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட அலுவலகங்கள், நூலகங்கள் மற்றும் பொது விளையாட்டு மைதானங்களில் மின்சாரம் மற்றும் எரிபொருள் பயன்பாட்டை இயன்றளவு குறைத்து, வளங்கள் வீணாகாமல் பாதுகாக்கும் நோக்கில் இந்த விசேட பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் சபையின் நிதிச் சுமையையும் குறைக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

தேவையற்ற நேரங்களில் மின்விளக்குகள் மற்றும் மின்விசிறிகளை அணைத்து வைக்க வேண்டும். இயற்கை வெளிச்சத்தை அதிகப்படியாகப் பயன்படுத்தி மின் பயன்பாட்டை குறைக்கும் பழக்கத்தை உத்தியோகத்தர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொது விளையாட்டு மைதானங்களில் இரவு நேர மின்விளக்குகள் (Floodlights) அத்தியாவசிய தேவைகளுக்கே பயன்படுத்தப்பட வேண்டும். நிகழ்வுகள் முடிந்தவுடன் உடனடியாக அவற்றை அணைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பிரதேச சபைக்குச் சொந்தமான வாகனங்கள் மற்றும் இயந்திரங்களைப் பயன்படுத்தும்போது தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து, எரிபொருள் பயன்பாட்டை குறைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சிக்கன நடவடிக்கைகளை வெற்றிகரமாக செயல்படுத்த, உத்தியோகத்தர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் விளையாட்டுக் கழகங்களும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments: