மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெல்லிக்காடு பகுதியில் நேற்றைய தினம் பெண் ஒருவரும், பெண்ணொருவரின் சடலம் ஒன்றும் மீட்கப்பட்ட நெல்லிக்காடு கிணற்றிலிருந்து நீர் வெளியேற்றப்பட்டு சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
நேற்றைய தினம் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெல்லிக்காடு வயல் பிரதேசத்தில் கிணற்றினுள் பெண் ஒருவர் குத்துயிராகவும், இன்னுமொரு பெண்ணின் சடலம் சிதைவுற்ற நிலையிலும் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டன.
குறித்த கிணற்றினுள் மேலும் ஏதேனும் சடலங்கள் இருக்குமோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நீதிமன்ற கட்டளைக்கமைவாக மண்முனை தென்மேற்குப் பிரதேச சபையின் ஒத்துழைப்புடன் பாதுகாப்புத் தரப்பினரின் பிரசன்னத்துடன் குறித்த கிணறு சோதனைக்காக நீர் இறைக்கப்பட்டு சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதேவேளை சோதனையின் போது குறித்த கிணற்றினுள் இருந்து வேறு எவ்வித சடலங்களோ மீட்கப்படவில்லை எனப் பொலிசாரினால் தெரிவிக்கப்பட்டதுடன், குறித்த விடயம் தொடர்பில் கொக்கட்டிச்சோலை, வவுணதீவு மற்றும் வெல்லாவெளி ஆகிய மூன்று பொலஸ் நிலையங்களும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், விசேட பொலிஸ் குழுக்களினூடாகவும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகப் பொலிசார் தெரிவித்தனர்.
No comments: