News Just In

2/04/2026 05:43:00 PM

சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயத்தில் சுதந்திர தினமும் சாதாரண தர மாணவர்களின் விடுகை விழாவும்!

சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயத்தில் சுதந்திர தினமும் சாதாரண தர மாணவர்களின் விடுகை விழாவும்


நூருல் ஹுதா உமர்

கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயத்தில் இலங்கையின் 78வது சுதந்திர தின நிகழ்வும், 2025 சாதாரண தரப் பரீட்சை மாணவர்களுக்கான விடுகை விழாவும் பாடசாலை அதிபர் எம்.சி. நஸ்லின் ரிப்ஹா அன்சார் அவர்களின் தலைமையில் இன்று (04) சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்வின் ஆரம்பமாக தேசிய கொடி ஏற்றப்பட்டதுடன், தேசிய கீதம் இசைக்கப்பட்டு சுதந்திர தினத்திற்கு உரிய மரியாதை செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து சுதந்திர தின நிகழ்வுகள் ஆரம்பமானது. அதனை தொடர்ந்து சுதந்திர தினமும் சாதாரண தர மாணவர்களின் விடுகை விழாவும் நடைபெற்றது. அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட வீதி அபிவிருத்தி அதிகாரசபை செயற்திட்ட பொறியியலாளர் எந்திரி எம்.ஐ.எம். றியாஸ், கௌரவ அதிதியாகக் கலந்து கொண்ட பிரதிக்கல்வி பணிப்பாளரும், சாய்ந்தமருது கோட்டக்கல்வி பணிப்பாளருமான திருமதி அஸ்மா அப்துல் மலிக் ஆகியோர்கள், நாட்டின் கல்வி முன்னேற்றமும் சுதந்திரத்தின் உண்மையான அர்த்தமும் குறித்து கவர்ச்சிகரமாக உரையாற்றினர்.

அவர் தனது உரையில், “ஒரு நாட்டின் உண்மையான சுதந்திரம் அதன் கல்வியால் தான் அளவிடப்படுகிறது. சிந்திக்கத் தெரிந்த தலைமுறையை உருவாக்குவது தான் நாட்டை பாதுகாக்கும் வலுவான ஆயுதம்” எனக் குறிப்பிட்டார்கள். மேலும், மாணவர்கள் கல்வியுடன் ஒழுக்கம், ஒற்றுமை மற்றும் பொறுப்புணர்வை வளர்த்துக்கொண்டு எதிர்கால சவால்களை எதிர்கொள்ள வேண்டிய அவசியத்தையும் அவர்கள் வலியுறுத்தினர்.

இதனையடுத்து சாதாரண தரப் பரீட்சைக்குத் தயாராகும் மாணவர்களுக்கு வாழ்த்துத் தெரிவிக்கப்பட்டதுடன், அவர்களின் கல்வி பயணத்திற்கு ஊக்கமளிக்கும் வகையில் விடுகை விழா நிகழ்வுகள் இடம்பெற்றன. மாணவர்களால் வழங்கப்பட்ட கலாச்சார நிகழ்ச்சிகள் சுதந்திர தினத்தின் சிறப்பை மேலும் உயர்த்தின. மேலும் மாணவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் தகவல் தொழிநுட்ப பாடநெறியை இலவசமாக தொடர புலமைப்பரிசில்களும் தனியார் கல்வி நிலையமொன்றால் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் அமீனாஸ் நகையக முகாமைத்துவ பணிப்பாளர் ஏ.ஆர்.எம். ஹியாஸ், அல்- மீஸான் பௌண்டஷன் தவிசாளர் நூருல் ஹுதா உமர், பாடசாலை பிரதி அதிபர் எம்.எப். ஐனுல் மர்ஷுனா, உதவி அதிபர் ஏ.எம். பரூஸ், பகுதி தலைவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுகுழு பிரதிநிதிகள் என பெருந்திரளாக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

No comments: